சித்த மருத்துவ சிகிச்சை: உலக சுகாதார அமைப்புடன் மத்திய அரசு ஒப்பந்தம்
சித்த மருத்துவ சிகிச்சை: உலக சுகாதார அமைப்புடன் மத்திய அரசு ஒப்பந்தம்
சித்த மருத்துவ சிகிச்சை: உலக சுகாதார அமைப்புடன் மத்திய அரசு ஒப்பந்தம்
ADDED : மே 26, 2025 02:02 AM

புதுடில்லி : நம் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா ஆகியவற்றை சர்வதேச நாடுகளுக்கு கொண்டு செல்லும் வகையில், உலக சுகாதார அமைப்புடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
பல்வேறு நோய்களை தீர்ப்பதற்கு நம் முன்னோர் வழங்கிய பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யோகா, யுனானி ஆகியவற்றின் வாயிலாக ஏராளமான மருந்துகளும், மருத்துவ முறைகளும் உள்ளன.
இவற்றின் வளர்ச்சிக்காக மத்திய அரசில் 'ஆயுஷ்' அமைச்சகம் செயல்படுகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வாயிலாக, சர்வதேச அளவில் நம் பாரம்பரிய மருத்துவத்தை கொண்டு செல்லும் வகையில், 25.55 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பிரதமர் மோடி, நேற்று தனது 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில், இதை சுட்டிக்காட்டி, 'நம் ஆயுர்வேத துறையும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரலும் மே 24ல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
'இதன் வாயிலாக, சர்வதேச சுகாதார வகைப்பாடுகளின் கீழ், பாரம்பரிய மருத்துவ தொகுதிக்கான பணிகள் பிரத்யேகமாக துவங்கி உள்ளன. இதனால், உலகம் முழுதும் அதிக அளவு மக்களிடம், நம் பாரம்பரிய மருத்துவம் சென்றடையும்' என பேசினார்.
இந்நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'உலக சுகாதார அமைப்பில் நம் பாரம்பரிய மருத்துவ தொகுதி சேர்க்கப்பட்டதன் வாயிலாக ஆயுர்வேதம், யோகா, சித்தா, யுனானி, பஞ்சகர்மா ஆகிய சிகிச்சை நடைமுறைகள் உலக அளவில் தரம் மேம்படுத்தப்பட்ட அடிப்படையில் அங்கீகரிக்கப்படும்' என தெரிவித்தது.