கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை
கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை
கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை
ADDED : ஜன 03, 2024 12:25 AM

சென்னை:ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கட்டுமான நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
நாமக்கல்லை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 74. இவர், 'சத்தியமூர்த்தி அண்டு கோ' என்ற கட்டுமான நிறுவனம் நடத்துகிறார்.
கணக்கு விபரம்
சத்தியமூர்த்தி நிறுவனம் சார்பில், நாமக்கல், சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில், தமிழக அரசின் வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட துறைகளில், ஒப்பந்த அடிப்படையில் கட்டடங்கள் கட்டி கொடுத்துள்ளார்.
நாமக்கல் முல்லை நகரில் உள்ள, இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் உரிமையாளரின் வீட்டில், நேற்று வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
நேற்று காலை, 11:00 மணிக்கு, துப்பாக்கி ஏந்திய, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்புடன், வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு பெரியார் நகரில், 'பி.வி.இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ்' கட்டுமான நிறுவனம் செயல்படுகிறது. இங்கு நேற்று மதியம், 12:00 மணிக்கு வந்த வருமான வரி அதிகாரிகள் ஆறு பேர், அலுவலக கணக்கு விபரங்கள் குறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு, கருப்பணன் வீதியில் உள்ள, 'சி.எம்.கே. ப்ராஜெக்ட்ஸ்' கட்டுமான நிறுவன அலுவலகம், பார்க் சாலையில் உள்ள சி.எம்.கே. நிறுவன உரிமையாளர் குழந்தைசாமி வீடு ஆகியவற்றிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும், ஈரோடு, ரகுபதி நாயக்கன் பாளையத்தில், 'ஆர்.பி.பி.கன்ஸ்டிரக்ஷன்' உரிமையாளர் செல்வசுந்தரம் வீட்டிலும் சோதனை நடந்தது. இதேபோல, சி.எம்.கே. ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், சென்னை ஷெனாய் நகர் செல்லம்மாள் தெருவில், 'எம்.வி.காம்ப்ளக்ஸ்' என்ற கட்டடத்தில் செயல்படுகிறது.
ஜெ., நினைவிடம்
இந்த அலுவலகத்திலும், நேற்று வருமான வரி அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.
சி.எம்.கே. நிறுவனம், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது, அதிக அளவில் கட்டுமான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டுள்ளது.
சென்னையில் ஜெயலலிதா நினைவிடம், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு கட்டடம், மூலக்கொத்தளத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஆகியவற்றை, இந்த நிறுவனமே கட்டியுள்ளது.
இந்த கட்டுமான நிறுவனங்களில் முறையாக கணக்கு காட்டப்பட்டு, வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து, அலுவலக ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் போன்ற டிஜிட்டல் ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடத்துவதாக, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தி.மு.க., பிரமுகர் கோவை காளப்பட்டியில் உள்ள கிரீன்பீல்ட் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்களான, ஈரோட்டை சேர்ந்த சதாசிவம் மற்றும் பாலசுப்ரமணியத்தின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று காலை முதல் இரவு வரை வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
மேலும், கோவை பட்டணத்தில் ஐஸ்வர்யா கார்டனில் உள்ள ரியல் வேல்யு லேண்ட் புரோமோட்டர்ஸ் அண்டு பில்டர்ஸ் உரிமையாளர் ராமநாதன் அலுவலகம், வீட்டில் சோதனை நடந்தது. இவர் தி.மு.க., நிர்வாகி.
இவரின் வீட்டுக்குள் ரூபாய் நோட்டு எண்ணும் எந்திரத்துடன் நுழைந்த அதிகாரிகள், யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.