ரவுடிக்கு அடைக்கலம் கொடுப்போர் சொத்துகளை முடக்க ஐ.ஜி., உத்தரவு
ரவுடிக்கு அடைக்கலம் கொடுப்போர் சொத்துகளை முடக்க ஐ.ஜி., உத்தரவு
ரவுடிக்கு அடைக்கலம் கொடுப்போர் சொத்துகளை முடக்க ஐ.ஜி., உத்தரவு
ADDED : மே 30, 2025 07:02 AM

சென்னை : 'ரவுடிகளுக்கு அடைக்கலம் தருவோரின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: குற்றங்களின் தன்மைகளுக்கு ஏற்ப, 'ஏ பிளஸ், ஏ, பி, சி' வகை பட்டியலில், 27,666 ரவுடிகள் இருந்தனர். இவர்களில் இறந்து போனவர்கள், வயது முதிர்வு காரணமாக தீவிர செயல்பாட்டில் இல்லாதவர்கள், ரவுடித்தனத்தில் இருந்து விலகியவர்கள் குறித்து ஆய்வு செய்ததில், தற்போது, 26,400க்கும் குறைவான ரவுடிகளே இருப்பது தெரியவந்து உள்ளது.
ரவுடிகளின் பெயரில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன; சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளனர்; எத்தனை வங்கி கணக்குகள் உள்ளன என்பது குறித்த ஆய்வும் நடக்கிறது. ரவுடிகள் மட்டுமல்ல, அவர்களின் ரத்த உறவுகள், துாரத்து உறவினர்கள், நெருங்கிய கூட்டாளி பெயர்களில் உள்ள சொத்துக்களையும் முடக்கி வருகிறோம்.
ரவுடிகளின் செயல்பாடுகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அவர்களுக்கு அடைக்கலம் தருபவர்களின் சொத்துக்களையும், அவர்களின் வங்கி கணக்குகளையும் முடக்க வேண்டும் என, மாவட்ட, எஸ்.பி.,க்களுக்கு, மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ரவுடிகள் பெரும்பாலும், தாய், மனைவி, காதலி பெயரில் சொத்துக்கள் வாங்கி இருப்பதும், அவர்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருவதும் தெரியவருகிறது. அவற்றையும் முடக்க உள்ளோம்.