'இந்திரா இருந்திருந்தால் தி.மு.க., ஆட்சியை டிஸ்மிஸ் செய்திருப்பார்'
'இந்திரா இருந்திருந்தால் தி.மு.க., ஆட்சியை டிஸ்மிஸ் செய்திருப்பார்'
'இந்திரா இருந்திருந்தால் தி.மு.க., ஆட்சியை டிஸ்மிஸ் செய்திருப்பார்'
ADDED : மார் 25, 2025 05:34 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், நேற்று ஹிந்து மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தை, அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் திறந்து வைத்தார்.
பின் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., ஆட்சியில் சுகாதார வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் மக்களுக்கு செய்து தரவில்லை.
மீண்டும் 'மிசா'
திங்கட்கிழமை தோறும், ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் குறைதீர் கூட்டம் நடக்கிறது. ஆனால், எந்த மனுவுக்கும் தீர்வு இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் ஹிந்து மக்கள் கட்சி அலுவலகம் துவங்கி, ஹிந்து ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் பணியை வேகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், 1,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தகவல் கூறி உள்ளது. ஆனால், ஒரு லட்சம் கோடிக்கு ஊழல் நடந்ததாக தகவல்கள் வருகின்றன.
டாஸ்மாக்கில் ஊழல் நடக்கிறது என, முதன்முதலில் சொன்னவர் அமைச்சர் தியாகராஜன். அதனாலேயே, அவருக்கு டம்மி துறை ஒதுக்கப்பட்டு, அவர் ஓரங்கட்டப்பட்டுஉள்ளார். அமலாக்கத் துறை வழக்கை நேர்மையாக எதிர்கொள்ள துணிவில்லாமல், கோர்ட் வாயிலாக தடை பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், ஜனநாயக முறைப்படி நடக்கின்றனர். அது தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளது. இதே, காங்கிரஸ் முன்னாள் பிரதமர் இந்திரா, இப்போது இருந்திருந்தால், பிரிவினைவாதம் பேசும் தி.மு.க.,வினரை முட்டிக்கு முட்டி தட்டி சிறையில் அடைத்திருப்பார். மீண்டும் 'மிசா' சட்டம் பாய்ச்சப்பட்டிருக்கும்.
வழங்கக்கூடாது
இந்த சூழ்நிலையில், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்து விட்டுத்தான், சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால், ஊழலில் சம்பாதித்த கோடிகளை தேர்தலில் செலவு செய்வர்.
தமிழக அரசுக்கு, எப்போதும் போல் மத்திய அரசு, நிதி வழங்கக்கூடாது. முறையாக நிதி வழங்கினால், அதிலும் ஊழல் செய்து பணத்தை கொள்ளையடிப்பர். அதனால், மக்களுக்கு எவ்வித பயனும் இருக்காது. மக்களுக்கான திட்டங்களை, மத்திய அரசே நேரடியாக செய்ய வேண்டும். இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.