Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விஜிலென்ஸ் வரம்பில் டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அரசு விதிகள் செல்லும் என ஐகோர்ட் உத்தரவு

விஜிலென்ஸ் வரம்பில் டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அரசு விதிகள் செல்லும் என ஐகோர்ட் உத்தரவு

விஜிலென்ஸ் வரம்பில் டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அரசு விதிகள் செல்லும் என ஐகோர்ட் உத்தரவு

விஜிலென்ஸ் வரம்பில் டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அரசு விதிகள் செல்லும் என ஐகோர்ட் உத்தரவு

ADDED : ஜன 05, 2024 11:28 PM


Google News
சென்னை:'அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள், 'விஜிலென்ஸ்' என்ற ஊழல் கண்காணிப்பு ஆணையர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் வரும் வகையில் ஏற்படுத்தப்பட்ட திருத்த விதிகள் செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜிலென்ஸ் வரம்புக்குள், அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை கொண்டு வந்து, 2011 ஆகஸ்டில் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து, அப்போதைய தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு நிலுவையில் இருக்கும் போது, தேர்வாணைய விதிகளில் திருத்தம் ஏற்படுத்தி, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விஜிலென்ஸ் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டனர். 2011 ஆகஸ்டில் இருந்து திருத்த விதி அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பொது ஊழியர்கள் என்ற வரையறையில் வருகின்றனர். மாநில ஆணைய உறுப்பினர்களின் பணி நிபந்தனைகளுக்காக விதிமுறைகள் ஏற்படுத்த, அரசியலமைப்பு சட்டத்தின்படி கவர்னருக்கு அதிகாரம் உள்ளது.

கடந்த 2011 ஆகஸ்டில், அரசு பிறப்பித்த அரசாணை, நிர்வாக ரீதியான உத்தரவு. சட்டப்பிரிவுகளை மீறும் வகையில் நிர்வாக உத்தரவு இருக்க முடியாது. எனவே, அரசாணை செல்லும் என்று உத்தரவிட முடியாது என்பதால், ரத்து செய்யப்படுகிறது.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தை, தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. பொது ஊழியர்களுக்கு எதிரான புகாரை விசாரித்து, மேல் நடவடிக்கைக்காக, விஜிலென்ஸ் ஆணையருக்கு அறிக்கை அனுப்பும். பொது ஊழியர் என்ற வரையறைக்குள், தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வருகின்றனர்.

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

திருத்த விதிகளால், பணி நிபந்தனைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த புலனாய்வு அமைப்பு குறித்து, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பயப்பட தேவையில்லை.

விதிகளில் திருத்தம் ஏற்படுத்த, கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. திருத்த விதிகளை, தன்னிச்சையானது எனக்கூற முடியாது. விசாரணை ஏஜன்சியை ஏற்படுத்துவதால், தேர்வாணையத்தின் தன்னாட்சி சீர்குலைந்து விடும் என்றும் கூற முடியாது.

விஜிலென்ஸ் வரம்புக்குள் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை கொண்டு வருவதால், மனுதாரர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவர்கள் விதிவிலக்கு கோர முடியாது.

எனவே, விதிகளில் திருத்தம் ஏற்படுத்தியதை தன்னிச்சையானது எனக்கூற முடியாது. திருத்த விதிகளை எதிர்த்த மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us