ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்திவைப்பு
ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்திவைப்பு
ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்திவைப்பு
ADDED : ஜூன் 13, 2025 01:03 AM
சென்னை:நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அப்போதைய சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
மதுரை மாவட்டம், விநாயகா நகரைச் சேர்ந்தவர் ஆர்.லலிதாம்பாள். இவரது சகோதரர் கே.எஸ்.விஸ்வநாதன். இவர்களுக்கு, சென்னை கோயம்பேட்டில் 17 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை தமிழக அரசு 1983ல் கையகப்படுத்தியது. பின், தமிழக வீட்டுவசதி வாரியம், தன் வசம் வைத்திருந்தது.
கையகப்படுத்திய நிலத்தில், பயன்படுத்தாமல் உள்ள 6.5 சென்ட் நிலத்தை திருப்பி கேட்டு, 2023ல் உயர் நீதிமன்றத்தில் லலிதாம்பாள், விஸ்வநாதன் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டு மாதங்களில் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு, 2023ம் ஆண்டு நவ., 22ல் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி, சி.எம்.டி.ஏ.,வின் அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக, லலிதாம்பாள், விஸ்வநாதன் ஆகியோர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 'வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் என்பதால், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
'பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு, 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தொகையை அன்சுல் மிஸ்ரா ஊதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்சுல் மிஸ்ரா மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது. 25,000 ரூபாயை மூன்று வாரங்களுக்குள் டிபாசிட் செய்யவும் உத்தரவிட்டது.
விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு தள்ளிவைத்தது. அன்சுல் மிஸ்ரா சமீபத்தில் மத்திய அரசு பணிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.