தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
ADDED : செப் 22, 2025 07:32 AM

சென்னை: ஒன்றை புரிந்து, ஆராய்ந்து கற்க வேண்டுமெனில், தாய் மொழி கல்வியே அவசியம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி., மற்றும், 'திங்க் இந்தியா' மாணவர் அமைப்பின் சார்பில், சென்னை ஐ.ஐ.டி, வளாகத்தில், இரண்டு நாள், 'தக்ஷிணபதா மாநாடு' நடந்தது. இரண்டாம் நாளான நேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசியதாவது: நம் நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்முனைவோர்களின் திறன்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இளைஞர்கள் வேலை தேடுவோராக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாறி வருகின்றனர்.
ஏ.ஐ., எனும், செயற்கை நுண்ணறிவை கண்டு உலகமே அச்சப்பட்டாலும், இந்திய இளைஞர்கள் அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். நாட்டில் தற்போது, 75 சதவீத மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். நுாறு சதவீதம் எழுத்தறிவு இல்லாமல், நாம் முன்னேறிய நாடாக மாற முடியாது. அதற்காகவே, அனைவரும் எழுத்தறிவு பெற, புதிய திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு, மொழிகளுக்கு இடையிலான வேறுபாட்டை குறைக்கிறது. அதன் வழியே மொழி பெயர்ப்பு சுலபமாகிறது.
நான் தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன். தமிழ் மொழி சங்க இலக்கியங்களின் ஊற்றாக திகழ்கிறது. ஆனால், ஒன்றை புரிந்து, ஆராய்ந்து கற்க வேண்டுமெனில், தாய் மொழி கல்வியே அவசியம். அதையே, புதிய கல்விக் கொள்கையும் வலியுறுத்துகிறது. நம்நாடு வரலாற்று பெருமைகளை கொண்டது.
ஆனால், வடக்கு பகுதிகளில் தொடர் படையெடுப்புகளால், நாகரிகங்களை தக்க வைக்க முடியாமல் போனது. அதேநேரம், தென் மாநில மக்கள், தங்கள் நாகரிகத்தை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர். நான் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சென்றேன். 1,000 ஆண்டுகளுக்கு முன்பே, அற்புதமான கட்டட கலை அம்சங்களுடன் கட்டியுள்ளனர். தென்காசிக்கும் சென்றேன்.
வடக்கே உள்ள காசிக்கும், தெற்கே உள்ள தென்காசிக்கும் 2,000 கி.மீ., வித்தியாசம். ஆனால், இரண்டும் சிவாலயங்கள் தான். இதுவே, நம் பண்பாடு, ஆன்மீகம் இணைப்பிற்கான சான்று. இவ்வாறு அவர் பேசினார்.