Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நட்பை எப்படி ஆவணங்கள் வாயிலாக நிரூபிக்க முடியும்: ஐகோர்ட் கேள்வி

நட்பை எப்படி ஆவணங்கள் வாயிலாக நிரூபிக்க முடியும்: ஐகோர்ட் கேள்வி

நட்பை எப்படி ஆவணங்கள் வாயிலாக நிரூபிக்க முடியும்: ஐகோர்ட் கேள்வி

நட்பை எப்படி ஆவணங்கள் வாயிலாக நிரூபிக்க முடியும்: ஐகோர்ட் கேள்வி

ADDED : செப் 04, 2025 01:53 AM


Google News
சென்னை:'நட்பை எப்படி ஆவண ஆதாரங்கள் வாயிலாக நிரூபிக்க முடியும்' என, கேள்வி எழுப்பிய, சென்னை உயர் நீதிமன்றம், தஞ்சாவூரை சேர்ந்தவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

தஞ்சாவூரை சேர்ந்தவர் பெரியசாமி. கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு, அவரது நண்பரான, ஈரோடை சேர்ந்த கணேசன், சிறுநீரகம் தானம் செய்ய முன் வந்தார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கோரி, உடல் உறுப்பு தானத்தை முறைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகார குழுவிடம் விண்ணப்பித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஈரோடு மாவட்ட கலெக்டர் அளித்த அறிக்கையில், 'கணேசனும், பெரியசாமியும் குடும்ப நண்பர்கள் என நிரூபிக்க, எந்த ஆவண ஆதாரங்களும் இல்லை' என, தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்து, கடந்த ஜூனில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகார குழு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து, சிறுநீரகத்தை தானமாக பெற உள்ள பெரியசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் ஜி.ஆர்.எம்.பழனியப்பன் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

குடும்ப நட்பை, எப்படி ஆவண ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்? நட்பு என்ற உறவு, உணர்வு சம்பந்தப்பட்டது; அதை ஆவணங்கள் தீர்மானிக்க முடியாது. எனவே, சிறுநீரகத்தை தானமாக பெறும் பெரியசாமியும்,தானமாக வழங்கும் கணேசனும், அங்கீகார குழு முன், குடும்பத்தினருடன் இன்று நேரில் ஆஜராக வேண்டும்.

அவர்களின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து, நான்கு வாரங்களுக்குள் அங்கீகார குழு சட்டப்படி, இறுதி முடிவு எடுக்க வேண்டும். உறவினர்கள் அல்லாதவர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதை, சட்டம் தடை செய்யவில்லை.

மாறாக, அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில், உடல் உறுப்புகள் தானம் செய்ய வேண்டும் என்று மட்டுமே, சட்டம் வலியுறுத்துகிறது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் போது, பண பரிவர்த்தனைகள், அழுத்தம் இருக்கக்கூடாது என்பதை மட்டுமே சட் டம் வலியுறுத்துகிறது.

எனவே, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்து, அங்கீகார குழு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us