11,508 வீடுகள், மனைகள் விற்க போராடும் வீ.வ.வாரியம்
11,508 வீடுகள், மனைகள் விற்க போராடும் வீ.வ.வாரியம்
11,508 வீடுகள், மனைகள் விற்க போராடும் வீ.வ.வாரியம்
ADDED : ஜூலை 09, 2024 03:50 AM

சென்னை: தமிழகம் முழுதும், 11,508 வீடு, மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் வீட்டுவசதி வாரியம் சார்பில், குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களில், வீடு, மனைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும்.
இவற்றை பெற, பொதுமக்கள் மத்தியில் கடும்போட்டி நிலவும். அதேசமயம், வாரிய நிதியை பயன்படுத்தாமல், சுயநிதி முறையில் வீடுகள் கட்டத் துவங்கியதால், விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டது. வீடுகள், மனைகள் விற்காமல் முடங்குவது அதிகரித்துள்ளது.
சுயநிதி முறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், 50 சதவீத மக்கள் மட்டுமே முன்பதிவு செய்ய வருகின்றனர். இதனால், எஞ்சிய வீடுகளுக்கான தொகையை வாரியம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதில், வாரிய கோட்ட அலுவலக பணியாளர்களின் அலட்சியத்தால், மக்களிடையே வீடு, மனை வாங்கும் ஆர்வம் குறைந்து வருகிறது.
வீட்டுவசதி வாரிய திட்டப் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில், 10,000க்கும் மேற்பட்ட வீடு, மனைகள் விற்காமல் முடங்கி உள்ளன. இது, வாரியத்துக்கு நிர்வாக ரீதியாக நிதி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் வீட்டுவசதி வாரியத்தின் பல்வேறு திட்ட பகுதிகளில், 7,482 மனைகள், 4,026 வீடுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.
இதற்கான விற்பனை அறிவிப்புகளை வெளியிட, அந்தந்த கோட்ட அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இந்த வீடு, மனைகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.