Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/'அமீபா' தொற்று: தமிழக எல்லைகளில் 'அலெர்ட்'

'அமீபா' தொற்று: தமிழக எல்லைகளில் 'அலெர்ட்'

'அமீபா' தொற்று: தமிழக எல்லைகளில் 'அலெர்ட்'

'அமீபா' தொற்று: தமிழக எல்லைகளில் 'அலெர்ட்'

ADDED : ஜூலை 09, 2024 03:59 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை : 'அமீபா' தொற்று பரவல் காரணமாக, கேரளாவில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

மூளை அயற்சியை ஏற்படுத்தி, உயிரை கொல்லும் புதிய வகை அமீபா தொற்று பரவல், கேரள சுகாதாரத்துறைக்கு சவாலாக மாறியுள்ளது. அங்கு, 14 வயது சிறுவன் உள்பட, மூன்று பேர் பலியாகியுள்ளனர். சுகாதாரமற்ற நீரில் குளிக்கும் போது, 'மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற அமீபா நுண்ணுயிரி, சுவாசப்பாதை வழியே ஊடுருவி, நேரடியாக மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதனால், காய்ச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி, மனக்குழப்பம், பிதற்றல், வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. இதற்கு, உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும். கேரளாவில் இவ்வகை பாதிப்பு அதிகரிப்பதால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை அமீபா தொற்று பாதிப்பு இல்லை. அதேசமயம், கேரளாவில் பாதிப்பு இருப்பதால், அதை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

குறிப்பாக தேங்கிய நீரிலோ, அசுத்தமான அல்லது மாசடைந்த நீரிலோ பொது மக்களும், குழந்தைகளும் குளிக்கக்கூடாது. குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் துாய்மையான சூழலில் இருப்பதை, உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் நீச்சல் குளங்கள் அனைத்திலும், வழிகாட்டுதலின்படி குளோரின் மருந்து கலப்பது அவசியம்.

மூளை அயற்சி அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவோரை, தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தி சிகிச்சை அளிக்க, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us