ஜாதி சான்றிதழில் 'ஹிந்து' நீக்கம்; ஹிந்து அமைப்புகள் கண்டனம்
ஜாதி சான்றிதழில் 'ஹிந்து' நீக்கம்; ஹிந்து அமைப்புகள் கண்டனம்
ஜாதி சான்றிதழில் 'ஹிந்து' நீக்கம்; ஹிந்து அமைப்புகள் கண்டனம்
ADDED : ஜூன் 11, 2025 03:00 AM

மதுரை: தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில் மதத்தை குறிக்கும் 'ஹிந்து' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஜாதி, மதம் கூடாது என வலியுறுத்தப்பட்டாலும் அரசு சலுகைகள், திட்டங்கள் வழங்குவதில் ஜாதி, மதம் பின்பற்றப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லுாரியில் மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் தவிர்க்க முடியாதது.
இச்சான்றுகளில் ஹிந்து மறவர், ஹிந்து வேளாளர், ஹிந்து நாடார் என ஜாதிக்கு முன் 'ஹிந்து' என்ற வார்த்தை இடம் பெறும். ஆனால் தற்போது ஆன்லைன் வழியாக பெறப்படும் சான்றிதழ்களில் நேரடியாக ஜாதி பெயர், அது பிற்படுத்தப்பட்ட பிரிவா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவா என மட்டும் குறிப்பிடப்படுகிறது. 'ஹிந்து' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இது குழப்பத்துடன் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் கூறியதாவது: கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அரசு சலுகைகள் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாணவர்கள் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட என எந்த பிரிவை சார்ந்தவர்கள் என்பது தெரிவது அவசியம். குறிப்பாக 'ஹிந்து வன்னியர்' என்பது 'டி.என்.சி.,' பிரிவில் வரும். 'கிறிஸ்தவ வன்னியர்' என்பது 'பி.சி.,' பிரிவில் வரும். மாணவர் 'டி.சி.,'யிலும் ஜாதி பெயர் குறிப்பிடாமல் அந்த இடத்தில் 'ரெபர் டூ ஒரிஜினல் கம்யூனிட்டி சர்டிபிகேட்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜாதி சான்றிதழில் 'ஹிந்து' என்ற வார்த்தையும் இடம் பெறாததால் மாணவர் எந்த பிரிவை சேர்ந்தவர் என தெரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது என்றனர்.
அமைப்புகள் கண்டனம்:
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது: ஆன்லைன் மூலம் பெறப்படும் ஜாதி சான்றிதழில் ஜாதி பிரிவுகளுக்கு முன் இடம் பெறும் 'ஹிந்து' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இது மிக அபாயகரமான விஷயம். ஒட்டுமொத்தமாக ஹிந்துக்களுடைய உரிமைகளை தட்டிப் பறிப்பதாகும். நிர்வாக ரீதியாக குளறுபடி ஏற்படும். ஹிந்துக்களின் சலுகைகள் பறிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றார்.
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் கூறுகையில், தி.மு.க., ஆட்சியில் ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். ஹிந்து மதத்திற்கு உட்பட்ட ஜாதிகள் வேண்டும்; ஆனால் அந்த மதம் வேண்டாமா. ஓட்டுக்களுக்காக பிற மதங்களை துாக்கிப்பிடிக்கும் தி.மு.க., அரசுக்கு, ஹிந்து மதம் மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம். இது கண்டிக்கத்தக்கது என்றார்.