Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ முதியோரை குறிவைத்து கொலை கொள்ளை நடப்பது அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் கவலை

முதியோரை குறிவைத்து கொலை கொள்ளை நடப்பது அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் கவலை

முதியோரை குறிவைத்து கொலை கொள்ளை நடப்பது அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் கவலை

முதியோரை குறிவைத்து கொலை கொள்ளை நடப்பது அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் கவலை

ADDED : ஜூன் 11, 2025 03:04 AM


Google News
Latest Tamil News
மதுரை : 'முதியோர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். அவர்களை சிலர் குறிவைத்து இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர். இதனால் கொலை, கொள்ளை நடப்பது அதிகரிக்கிறது,' என தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையம் அமைக்க தாக்கலான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு கவலை தெரிவித்தது.

மதுரையை சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:


முதியோர் நலனிற்காக 2007 ல் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. சட்டப்பூர்வ வாரிசுகள் பெற்றோரை பராமரிக்கவில்லையெனில் போலீசில் புகார் அளிக்கலாம். இது குறித்து 70 சதவீத முதியோர்களுக்கு விழிப்புணர்வு இல்லை.

தற்போது கணவன், மனைவி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் பெற்றோரை பராமரிக்க நேரமில்லை. வசதிகள் இருந்தபோதிலும், சில முதியவர்கள் தனிமையில் தவிக்கின்றனர். பேசுவதற்கு வீட்டில் யாரும் இல்லாததால், முதியவர்கள் தாமாக முன்வந்து முதியோர் இல்லங்களில் தஞ்சம் அடைகிறார்கள். சில குடும்பங்களில் மாமியார் மற்றும் மருமகளுடன் ஏற்படும் பிரச்னை, சொத்து பிரச்னையால் முதியோர் இல்லங்களைத் தேடி பெற்றோர் செல்ல வழிவகுக்கிறது. இதுபோன்ற சூழலால் முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிகின்றன.

சில முதியோர் இல்லங்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. முதியோர்களை சரியாக பராமரிப்பதில்லை. சில முதியோர் இல்லங்களில் உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக வழங்குவதில்லை.

மத்திய சுகாதாரத்துறையின் தேசிய முதியோர் சுகாதார பராமரிப்புத் திட்டம் முதியோருக்கு மருத்துவ உதவி, மறுவாழ்வு அளிக்க வழிவகுக்கிறது. இத்திட்டம் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம், ஆயுஷ், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையத்தை (என்.சி.ஏ.,) நிறுவ மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு அளித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: முதியோர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். அவர்களை சிலர் குறிவைத்து இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர். இதனால் கொலை, கொள்ளை நடப்பது அதிகரிக்கிறது. முதியோர்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலர், தேசிய முதியோர் மைய இயக்குனர் ஜெனரல், தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அவர்கள் 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us