வணிக வளாகம் கட்ட மட்டுமே தடை ஹிந்து அறநிலையத்துறை தகவல்
வணிக வளாகம் கட்ட மட்டுமே தடை ஹிந்து அறநிலையத்துறை தகவல்
வணிக வளாகம் கட்ட மட்டுமே தடை ஹிந்து அறநிலையத்துறை தகவல்
ADDED : ஜூன் 21, 2025 02:00 AM
சென்னை:'கோவில் நிலங்களில் வணிக வளாகம் கட்டுவதற்கு மட்டுமே, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது' என, ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இவற்றுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததாக தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை, வணிக வளாக கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
'ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களில் எந்தவொரு கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, 'இந்த நீதிமன்றம், கடந்த ஜனவரியில் நந்தீஸ்வரர் கோவில் வழக்கில், வணிக வளாகம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. எனவே, கோவில் நிலங்களில் வணிக வளாகம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. அந்த பணிகளில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
கடந்த 18 ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள, பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இவற்றில் வணிக வளாகம் கட்டுமானப் பணி தவிர, மற்ற பணிகளுக்கு தடையில்லை.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.