தனித்தனியாக வந்தனர்; ஒரே காரில் திரும்பினர் விவாகரத்து கேட்டு ஜி.வி.பிரகாஷ்--, சைந்தவி மனு
தனித்தனியாக வந்தனர்; ஒரே காரில் திரும்பினர் விவாகரத்து கேட்டு ஜி.வி.பிரகாஷ்--, சைந்தவி மனு
தனித்தனியாக வந்தனர்; ஒரே காரில் திரும்பினர் விவாகரத்து கேட்டு ஜி.வி.பிரகாஷ்--, சைந்தவி மனு
ADDED : மார் 25, 2025 03:44 AM

சென்னை: பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், அவரது மனைவியும், பாடகியுமான சைந்தவி இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். கடந்த 2013ம் ஆண்டு, தன் பள்ளி தோழியும், பிரபல பின்னணி பாடகியுமான சைந்தவியை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு முன்னும், பின்னரும், இருவரும் இணைந்து நிறைய பாடல்களை பாடியுள்ளனர்.
கடந்த, 12 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
குடும்பத்தினர் இடையே எழுந்த பிரச்னையால், சமீப நாட்களாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. கடந்தாண்டு சமூக வலைதளத்தில், ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர், தாங்கள் பரஸ்பரம் பிரிவதாக பதிவிட்டனர்.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி, நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.செல்வசுந்தரி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி நேரில் ஆஜராகினர். தாங்கள் இருவரும் மனமுவந்து பிரிவதாக, நீதிபதியிடம் தெரிவித்தனர்.
அதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார். பின், ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர், ஒரே காரில் சென்றனர். நீதிமன்றத்திற்கு வரும்போது, இருவரும் தனித்தனி காரில் வந்தனர்.