மீன் விற்பனை நிலையங்கள் புதிதாக 10 இடங்களில் திறக்க அரசு நடவடிக்கை
மீன் விற்பனை நிலையங்கள் புதிதாக 10 இடங்களில் திறக்க அரசு நடவடிக்கை
மீன் விற்பனை நிலையங்கள் புதிதாக 10 இடங்களில் திறக்க அரசு நடவடிக்கை
ADDED : ஜூன் 05, 2025 11:20 PM
சென்னை:'நியாயமான விலையில், மக்களுக்கு தரமான மீன்கள் விற்பதற்காக, புதிதாக, 10 மீன் விற்பனை நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என, மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக மீன்வளத் துறையின் கீழ் இயங்கி வரும், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் சார்பில், தற்போது கடலோர மாவட்டங்களில், 12 நிலையங்கள் வாயிலாக, மீன் விற்பனை செய்யப்படுகிறது. புதிதாக, 10 இடங்களில், மீன் விற்பனை நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடலோரம் அல்லாத மற்ற மாவட்டங்களில், மீன் விற்பனை நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அரியலுார், கடலுார் மாவட்டம் நெய்வேலி, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், திருநெல்வேலி, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் நான்கு இடங்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
தேர்வு செய்யப்பட்ட இடங்களில், கட்டடம் கட்டப்படும். அதில், மீன்வள கூட்டுறவு இணையத்தில் உறுப்பினராக உள்ள மீனவர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் இடம் வழங்கி, மீன் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் வாயிலாக, தரமான மீன்கள் வெளிச்சந்தை விலையை விட, குறைந்த மற்றும் நியாயமான விலையில் விற்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.