கடல்சார் வள பாதுகாப்புக்கு நிதி திரட்ட புதிய அறக்கட்டளை துவக்கியது அரசு
கடல்சார் வள பாதுகாப்புக்கு நிதி திரட்ட புதிய அறக்கட்டளை துவக்கியது அரசு
கடல்சார் வள பாதுகாப்புக்கு நிதி திரட்ட புதிய அறக்கட்டளை துவக்கியது அரசு
ADDED : செப் 10, 2025 02:19 AM

சென்னை:கடல்சார் வளங்கள் பாதுகாப்புக்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்ட, புதிய அறக்கட்டளை துவக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், வனவர், வனக்காவலர், வனத்துறை பணியாளர்கள் என, 333 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அத்துடன், மஞ்சப்பை பிரசாரத்தில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கடல்சார் வள அறக்கட்டளை, சென்னை மணலி - எண்ணுார் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் கவுன்சில் போன்றவற்றை, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:
காடுகளும், மலைகளும் இயல்பை இழக்கும் போது தான், பாலை என்பது உருவாகிறது. எனவே, காடு, மலைகளை, இயல்பு மாறாமல் பாதுகாப்பது, நம் பொறுப்பு. இதற்கான முன்களப் பணியாளர்களாக, வனவர்கள், வனக்காவலர்கள் இருக்கின்றனர். அந்த வகையில், இயற்கை வளங்களை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு, இவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
வன வள பாதுகாப்பில், மனித - விலங்கு மோதல், மிக முக்கிய கட்டமாக உள்ளது. இதில், வனத்துறை களப் பணியாளர்கள், ஏதேனும் ஒரு பக்கம் செல்லாமல், மனிதர்களையும், விலங்குகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது:
தமிழக வனத்துறையில், சமீபத்தில், 1,417 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. அடுத்த கட்டமாக தற்போது, 333 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. அரசு பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவதுடன், வெளிநாட்டு முதலீடுகள் வாயிலாகவும், வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், தமிழகத்தில் வேலை தேடுவோர் வெகுவாக குறைந்துள்ளனர். பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில், மத்திய அரசின் பங்கேற்பு, ஒத்துழைப்பு அவசியம்.
இதனால், சில விஷயங்களில் இணக்கமாகவும், சில விஷயங்களில் எதிர்த்து போராடியும், தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நிதி ஆதாரங்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தாலும், மக்களுக்கான அடிப்படை வசதிகளை புறக்கணிக்காமல் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு, வனத்துறை தலைவர் ஸ்ரீநிவாஸ் ஆர் ரெட்டி, சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ராகுல்நாத் உள்ளிட்டடோர் பங்கேற்றனர்.