மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்: அரசு பெருமிதம்
மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்: அரசு பெருமிதம்
மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்: அரசு பெருமிதம்
ADDED : மே 12, 2025 01:30 AM

சென்னை: தமிழக அரசின் முதன்மை திட்டங்களால், மின்னணு ஏற்றுமதியிலும், தோல் பொருள்கள், ஜவுளி துணிகள் ஏற்றுமதியிலும், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
இதுதொடர்பான, தமிழக அரசின் அறிக்கை:
முதல்வர் ஸ்டாலினின் தொடர் முயற்சிகளால், தொழிற்சாலைகள் புதிது புதிதாக துவக்கப்பட்டுள்ளன. நம் நாட்டிற்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று, 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு, அதன் வழியே, 10.27 லட்சம் கோடி ரூபாய் புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
அதன்வாயிலாக, உருவாக்கப்பட்டுள்ள, 32.23 லட்சம் வேலை வாய்ப்புகளால், தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் என்று புகழப்படுகிறது.
தி.மு.க., அரசின் திட்டங்களால், தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருட்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில், 2020 - 21ல் 2,615 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி, 2024 - 25ல் 5,207 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களை விட அதிகமாக, 1,465 கோடி டாலர் மதிப்புடைய, மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து, இந்தியாவில் முதலிடம் என்ற பெருமையையும் தமிழகம் பெற்றுள்ளது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதிலும், தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தியது. இதன் காரணமாக, 2020 - 21ல், 2.9 கோடியாக இருந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை, 2024 - 25ல் 3.87 கோடியாக உயர்ந்துள்ளது.
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம், தேசிய அளவில், 26 சதவீதம். தமிழகத்தில், 2023 - 24ல் 51.3 சதவீதமாக உயர்ந்தது. மாநிலம் எங்கும் பெரிய அளவில் ஜாதி மோதல்களோ, தொழிற்சாலைகளில் பிரச்னைகளோ இல்லாமல் அமைதி நிலவுவதும், மாநிலத்தின் நிலையான வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி தயார்நிலை, தோல் பொருட்கள், ஜவுளி துணிகள் ஏற்றுமதி போன்றவற்றிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
புத்தாக்க தொழில்கள் தரவரிசை பட்டியலில், 2018ல் கடைசி இடத்தில் இருந்த தமிழகம், 2022ல் முதலிடம். அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழிற்சாலைகள், அதிக தொழிலாளர்கள் போன்றவற்றிலும், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.