Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலை விரிவாக்கத்திற்கு அகற்றிய நிழற்குடைகள் மீண்டும் அமைக்காததால் பயணியர் அவதி

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றிய நிழற்குடைகள் மீண்டும் அமைக்காததால் பயணியர் அவதி

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றிய நிழற்குடைகள் மீண்டும் அமைக்காததால் பயணியர் அவதி

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றிய நிழற்குடைகள் மீண்டும் அமைக்காததால் பயணியர் அவதி

ADDED : மே 12, 2025 01:22 AM


Google News
Latest Tamil News
வண்டலுார்:வண்டலுார் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், 23 இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில், ஏழு இடங்களில் மட்டுமே நிழற்குடைகள் உள்ளன.

மீதமுள்ள 16 இடங்களில் நிழற்குடை இல்லாததால், சுட்டெரிக்கும் வெயில், திடீர் மழையால் பயணியர் கடும் அவதியை சந்திக்கின்றனர்.

சென்னையின் நுழைவு வாயிலாகவும், முக்கிய வழித்தடமாகவும், வண்டலுார் முதல் செங்கல்பட்டு வரையிலான, 28 கி.மீ., துாரம் உள்ள ஜி.எஸ்.டி., சாலை உள்ளது.

இந்த சாலையின் இரு பக்கமும் 40க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. தவிர, நந்திவரம் கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் ஆகிய நகராட்சிகளும் உள்ளன. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து முனையமும் இதே வழித்தடத்தில் உள்ளது.

இப்பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லுாரி, தொழில், வணிகம், அரசு உத்தியோகம் மற்றும் கூலி வேலை என, தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகள் வாயிலாக பல்வேறு இடங்களுக்கு பயணிக்கின்றனர்.

இவர்கள், தங்கள் ஊராட்சி பகுதியிலிருந்து ஜி.எஸ்.டி., சாலைக்கு வந்து, அங்கிருந்து அரசு பேருந்துகள் வாயிலாக பயணிக்க வேண்டி உள்ளது.

அரசு பேருந்துகள் நின்று செல்ல, வண்டலுார் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையின் இரு பக்கமும் தலா 23 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.

இதில், 7 நிறுத்தங்களில் மட்டுமே பயணியர் நிழற்குடை உள்ளது. மீதமுள்ள 16 நிறுத்தங்களில் நிழற்குடை இல்லை. இதனால், அக்னி வெயிலும், திடீரென பெய்யும் மழையும், பயணியரை கடும் அவஸ்தைக்குள்ளாக்கி வருகிறது.

பேருந்து பயணியர் கூறியதாவது:

வண்டலுார் முதல் கூடுவாஞ்சேரி வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், இரணியம்மன் கோவில், வண்டலுார் ரயில் நிலையம், உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் பள்ளி, டீ கடை, அக்ஷயா நகர், கூடுவாஞ்சேரி என, எட்டு இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில், வண்டலுார் ரயில் நிறுத்தம், ஊரப்பாக்கம் டீ கடை நிறுத்தம் என, இரு இடங்களில் மட்டுமே நிழற்குடைகள் உள்ளன.

கூடுவாஞ்சேரியில் ஒரு பக்கம் மட்டும் தென்னங்கீற்றுகளால் தற்காலிக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

கூடுவாஞ்சேரி முதல் மறைமலைநகர் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், சீனிவாசபுரம், தைலாபுரம், பொத்தேரி, காட்டாங்கொளத்துார், மறைமலை நகர் என, ஐந்து நிறுத்தங்கள் உள்ளன. இவர்களில், மறைமலை நகரில் மட்டும் ஒரு பக்கம் நிழற்குடை உள்ளது; மற்றொரு பக்கம் தற்காலிக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

இதர நான்கு நிறுத்தங்களில் நிழற்குடை இல்லை.

மறைமலை நகர் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், போர்டு கார் கம்பெனி, கீழ்க்கரணை, மல்ரோசாபுரம், சிங்கபெருமாள் கோவில், சிறுசேரி, சத்யா நகர், மகேந்திரா சிட்டி, டோல்கேட், புலிப்பாக்கம், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் என, 10 இடங்களில் நிறுத்தங்கள் உள்ளன.

இவற்றில், சத்யா நகர், புலிபாக்கம், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே நிழற்குடைகள் உள்ளன.

வண்டலுார் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையின் இரு பக்கமும் தலா 23 பேருந்து நிறுத்தங்கள் என, மொத்தம் 46 நிறுத்தங்கள் உள்ளன. இதில் 15 ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட நிழற்குடைகள் ஏழு இடங்களில் மட்டும் உள்ளன.

சாலை விரிவாக்கத்தால், பல இடங்களில் கட்டப்பட்டிருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டன. ஆனால், புதிய நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை.

சில இடங்களில், பகுதி சார்ந்த அரசியல் கட்சியினர், ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் கூரைகளால் ஆன நிழற்குடைகளை தற்காலிகமாக அமைத்துள்ளனர். இதில், பயணியருக்கு அமர வசதி இல்லை.

இதனால், பேருந்திற்காக காத்து நிற்கும் பயணியர் வெயில், மழையால் கடும் அவஸ்தையை சந்திக்கின்றனர்.

எனவே, தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி, ஜி.எஸ்.டி., சாலையில் நிழற்குடைகள் இல்லாத பேருந்து நிறுத்தங்களை கணக்கெடுத்து, அங்கே, தரமான நிழற்குடை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us