மோசடி நிதி நிறுவன புள்ளி வெளிநாட்டில் இருந்து 'வீடியோ'
மோசடி நிதி நிறுவன புள்ளி வெளிநாட்டில் இருந்து 'வீடியோ'
மோசடி நிதி நிறுவன புள்ளி வெளிநாட்டில் இருந்து 'வீடியோ'
ADDED : ஜன 03, 2024 11:30 PM

சென்னை:'ரெட்கார்னர்' நோட் டீஸ் வழங்கியும், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல், வெளிநாடுகளில் பதுங்கி உள்ள, நிதி நிறுவன மோசடி கும்பலின் முக்கிய புள்ளி, 'வீடியோ' வெளியிட்டு இருப்பது, போலீசாரை அதிர்ச்சிஅடையச் செய்து உள்ளது.
வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், வேத நாராயணன், ஜனார்த்தனன் ஆகியோர், சென்னை கிண்டியை தலைமையிடமாக வைத்து, ஐ.எப்.எஸ்., எனும் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
முதலீட்டாளர்களுக்கு, மாதம், 6 - 10 சதவீதம் வட்டி தருவதாக கூறி, 84,000 பேரிடம், 5,900 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வெளிநாடுகளுக்கு தப்பி யுள்ள, லட்சுமி நாராயணன் உள்ளிட்டோருக்கு எதிராக, 'இன்டர்போல்' எனும் சர்வதேச போலீசார் வாயிலாக, 'ரெட் கார்னர்' நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இதையடுத்து, 'போலீசார் கைது செய்து விடுவர். மோசடி நபர்களின் சொத்துக்களை முடக்கி விடுவர். பணம் திரும்ப கிடைத்துவிடும்' என, முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
அதை சிதைக்கும் வகை யில், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் உள்ள, லட்சுமி நாராயணன், 'வீடியோ' ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், ஏதோ புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பது போல, 'இந்த ஆண்டுக்குள் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும்; முதலீட்டாளர்கள், எனக்கு 'இ - மெயில்' அனுப்புங்கள்' எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
சமீபத்தில் கூட, லட்சுமி நாராயணன் உள்ளிட்டோரின், 'வாட்ஸாப்' எண்ணிற்கு, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, தகவல் அனுப்பப்பட்டது. மோசடி செய்த பணத்தை, துபாய் உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்து உள்ளனர்.
ஆனால், ஓராண்டுக்குள் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என, வீடியோ வெளியிட்டு முதலீட்டாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி புகாரை திரும்ப பெற வைக்க முயற்சிக்கிறார். லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மோசடி கும்பலின் போன் எண்ணுக்கு, 'வாட்ஸாப்' அனுப்ப முடியும் அளவில் இருக்கும் போலீசாரால், அவர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாதா என்ற சந்தேகம், முதலீட்டாளர்களுக்கு எழுவது நிச்சயம்.