ஒவ்வொரு ஆசிரியரும் கடவுள் தான்: 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் பேச்சு
ஒவ்வொரு ஆசிரியரும் கடவுள் தான்: 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் பேச்சு
ஒவ்வொரு ஆசிரியரும் கடவுள் தான்: 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் பேச்சு
ADDED : செப் 23, 2025 06:44 AM

சென்னை; ''கடவுளை நான் நேரில் பார்த்திருக்கிறேன். என் ஒவ்வொரு ஆசிரியரும் எனக்கு கடவுள் தான்,'' என, பிரின்ஸ் பேராசிரியர் விருது வழங்கும் விழாவில், 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் பேசினார்.
பிரின்ஸ் கல்விக்குழுமம் சார்பில், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில் சிறந்த பேராசிரியர்களை ஐந்து பிரிவுகளில் தேர்வு செய்து, 'பிரின்ஸ் பேராசிரியர்' விருது வழங்கும் விழா, சென்னை அடுத்த பொன்மார், ஸ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.
சிறந்த பேராசிரியர்களுக்கு விருது வழங்கி, 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் பேசியதாவது:
கடவுளை நான் நேரில் பார்த்திருக்கிறேன். என் ஒவ்வொரு ஆசிரியரும் எனக்கு கடவுள் தான். ஆசிரியர்களுக்கு மதிப்பு தரும் இந்த விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். ஆசிரியர்கள் மீது மாணவ - மாணவியர் பக்தி வைக்க வேண்டும்.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று வந்த சுபான்ஷு சுக்லா அனுபவங்கள், 'ககன்யான்' திட்டத்திற்கு பயன்படும். இந்தாண்டு டிச., மாதம் ஆளில்லாத ராக்கெட் அனுப்பப்படும். வரும் 2027ல் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவர். ஆப்பரேஷன் சிந்துாரில் நம் செயற்கைக்கோள் சிறப்பாக செயல்பட்டது.
வரும் 2035ல் நமக்கான விண்வெளி ஆராய்ச்சிமையம் அமைக்கப்படுகிறது. அது, 52 டன் உடையது. இதை ஐந்து கட்டங்களாக பிரித்து செய்கிறோம். முதற்கட்டம், 2028ல் எடுத்துச் செல்லப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பிரின்ஸ் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் வாசுதேவன் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்து பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், ஐந்து பிரிவுகளில் தலா இரு பேராசிரியர் வீதம், 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த போராசிரியர் தேர்வுக்கு, தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், இந்த கவுரவிப்பு தொடரும்.
இவ்விழாவில், இஸ்ரோ தலைவர் நாராயணன் பங்கேற்றது, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு புது உத்வேகத்தை அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாணவ - மாணவியரின் அறிவியல் கண்காட்சியை, இஸ்ரோ தலைவர் நாராயணன் பார்வையிட்டார்.