''நாய் கூட பட்டம் வாங்குது; பட்டப்படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை'': திமுக., ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை
''நாய் கூட பட்டம் வாங்குது; பட்டப்படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை'': திமுக., ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை
''நாய் கூட பட்டம் வாங்குது; பட்டப்படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை'': திமுக., ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை
ADDED : ஜூலை 03, 2024 02:59 PM

சென்னை: ''இப்போது நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. எங்கள் பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டங்கள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை'' என சர்ச்சைக்குரிய வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய பா.ஜ., அரசு கண்டித்து இன்று (ஜூலை 3) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
இந்த ஆர்ப்பாட்டம் இந்தியாவின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. பார்லிமென்டில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்ற குரல் வந்த போது சபாநாயகர் ஒப்புக்கொண்டார். ஆனால் பிரதமர் மோடி பயந்து கொண்டு பதில் சொல்ல எதுவும் காரணம் இல்லாததால், இன்று முடிய இருந்த லோக்சபாவை நேற்று முடித்து வைத்திருக்கிறார். இது திமுக.,விற்கு கிடைத்த வெற்றி.
நல்ல காலம் திரும்புகிறது
நீட் தேர்வை இன்று, நேற்று அல்ல எப்போது அறிமுகப்படுத்தினார்களோ அன்றிலிருந்து எதிர்க்கும் இயக்கம் திமுக. கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் வரை தமிழகத்தில் நீட் நுழையவில்லை. ராகுல் இந்த நீட் தேர்வு விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டதை நான் மனமார பாராட்டுகிறேன்.
நீட் தேர்வு வருவதன் நோக்கமே நம்மை அழிக்க தான். நீட் தேர்வு ஒழுங்காக நடந்ததா? உலகின் அனைத்து முறைகேடுகளும் நீட் தேர்வில் தான் நடத்துள்ளது. ஒரு நல்ல காலம் திரும்பிக் கொண்டிருக்கிறது.
பிச்சை
யாராக இருந்தாலும் இந்த இயக்கத்தோடு போராட வேண்டும் என்ற நிர்பந்தம் வந்துள்ளது. நேற்று கட்சி ஆரம்பித்த விஜய்யாக இருந்தாலும் இதை ஆதரிக்கின்றனர். மக்களுக்கான ஆதரவு யார் கொடுத்தாலும் அதை வரவேற்பவர் தான் முதல்வர் ஸ்டாலின். நான் படித்தபோது பி.ஏ படித்தாலே போர்டு வைத்து கொள்வார்கள். இப்போது நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. எங்கள் பட்டப்படிப்புகள் குலம், கோத்திர பெருமையால் வரவில்லை; எங்கள் பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டங்கள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை. இவ்வாறு அவர் பேசினார்.