ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!
ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!
ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!
ADDED : ஜூன் 16, 2025 09:50 AM

சென்னை: ''ரோடு ஷோவிலும் , போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ இந்த முதல்வருக்கு துளியும் இல்லை'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பா.ம.க., இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11ம் தேதி அன்று பைக்கில் தவறி விழுந்து உயிரிழந்ததாக, தி.மு.க., அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழகத்தை பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள
தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம். இதே ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த தி.மு.க., கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்த போதே, இந்த அரசை நான் எச்சரித்தேன்.
ஆனால், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை! ரோடு ஷோவிலும் , போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ இந்த முதல்வருக்கு துளியும் இல்லை.
பா.ம.க., மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கள்ளத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்; தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.