Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அரைவேக்காட்டு அறிக்கை; அளந்து விடும் ரீல்கள்: மாறி மாறி தாக்கும் முதல்வர், இ.பி.எஸ்.,

அரைவேக்காட்டு அறிக்கை; அளந்து விடும் ரீல்கள்: மாறி மாறி தாக்கும் முதல்வர், இ.பி.எஸ்.,

அரைவேக்காட்டு அறிக்கை; அளந்து விடும் ரீல்கள்: மாறி மாறி தாக்கும் முதல்வர், இ.பி.எஸ்.,

அரைவேக்காட்டு அறிக்கை; அளந்து விடும் ரீல்கள்: மாறி மாறி தாக்கும் முதல்வர், இ.பி.எஸ்.,

UPDATED : ஜூன் 16, 2025 02:02 PMADDED : ஜூன் 16, 2025 01:11 PM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்: ''அரைவேக்காட்டு தனமாக அறிக்கை விடுகிறார் இ.பி.எஸ்., '' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதற்கு, '' வாய்க்கு வந்த ரீல்களை முதல்வர் ஸ்டாலின் அளந்து விடுகிறார் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பதிலடி கொடுத்துள்ளார்.

தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சோழ நாட்டின் காற்றை சுவாசிக்கும்போதே ஒரு கம்பீரம் பிறக்கிறது. காவிரி நீரைப் பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் கருணாநிதி. காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது தி.மு.க.,தான். 2024ல் ரூ.70 கோடியில் மினி டைடல் பார்க் தஞ்சையில் திறக்கப்பட்டுள்ளது. கும்பகோணம்-மன்னார்குடி சாலைப் பணிகள் 90% முடிந்துள்ளன.

மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் கொடுக்கும் வரவேற்பு வெளிப்படுத்துகிறது. இதனை எல்லாம் பார்த்து பொறுத்து கொள்ள முடியாமல், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., புலம்பி கொண்டு இருக்கிறார். தன்னுடைய உட்கட்சி பிரச்னையையும், கூட்டணி பிரச்னையையும் மறைப்பதற்காக, இன்றைக்கு அரசியல் அறிக்கை வெளியிட்டு கொண்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையை ஒழுங்காக செய்திகளை படித்து வெளியிடுகிறாரா? என்றால் அதுவும் கிடையாது. அரசு சார்பில் பத்திரிகை செய்தி கொடுக்கிறோம். அது உடனே டிவி நியூசில் வருகிறது. சோஷியல் மீடியாவில் வருகிறது. மறுநாள் எல்லா நியூஸ் பேப்பரிலும் வருகிறது. அப்போதும் செய்திகளை படிக்க மாட்டேன். பார்க்க மாட்டேன் என்று அடம்பிடித்து, அரைவேக்காட்டு தனமாக அறிக்கை விடுகிறார் இ.பி.எஸ்.,

அவருக்காக இல்லை என்றாலும் மக்களுக்காக, பதில் சொல்வது எனது கடமை. நான் பணியாற்றுவது உங்களுக்காக தான். மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனு மீதும் எடுக்கப்படும் நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். இந்த விழாவில், விவசாயிகளுக்கான குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனால் 8 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இ.பி.எஸ்., பதில்

முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் அளித்து இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல. 'அரைவேக்காட்டுத் தனமாக' இருக்கிறதாம் அவருக்கு. அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா முதல்வர் ஸ்டாலின் அவர்களே?

ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே- அது தான் அரைவேக்காட்டுத்தனம்.

தஞ்சைக்கு வந்த உங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்துள்ளனர். இது என்ன மாடல்? பாசிச மாடல் தானே? நான் செய்தித் தாள்களைப் படிப்பது இல்லையாம். சொல்பவர் யார் தெரியுமா? முரசொலி தவிர எந்தப் பேப்பரையும் படிக்காத, படிக்க விரும்பாத முதல்வர்!

நாள்தோறும் நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் செய்தித் தாள்களில் வருவது இல்லையா என்ன? இன்னும் சொல்லப் போனால், ஊடகம் மற்றும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் தானே என்னுடைய கருத்துகளை நான் தெரிவிக்கிறேன்?
எல்லா திட்டங்களிலும் கமிஷன் கணக்கு போட்டு பெட்டிகளில் அள்ளிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இருக்கும் 'பெட்டி' மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம்.

உட்கட்சி, கூட்டணிப் பூசல் சத்தம் எல்லாம் அறிவாலயத்தில் இருந்து கேட்பதாகத் தானே செய்திகள் வருகின்றன? நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று உங்கள் கூட்டணிக் கட்சியினர் பேசி வருவது உங்களுக்குத் தெரியாதா? ஆக, 'ஒன்றும் தெரியாத முதல்வர்' என்ற என்னுடைய கூற்றை மீண்டும் மெய்ப்பித்துவிட்டார். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

புதிய திட்டங்கள்!


தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டங்கள் பின்வருமாறு:

* தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு கூடுதல் மானியம் ஒதுக்கப்படும்.

* வெண்ணாறு, வெட்டாறு பிரியும் இடத்தில் ரூ.42 கோடியில் பாலம் அமைக்கப்படும்.

* கல்லணை கால்வாய் சாலை ரூ.40 கோடி செலவில் அகலப்படுத்தப்படும்.

* டெல்டா அல்லாத மாவட்டங்களில் சாகுபடிக்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us