உதயநிதிக்கு வேண்டிய நபர்களான ரத்தீஷ், ஆகாஷுக்கு அமலாக்கத்துறை வலை
உதயநிதிக்கு வேண்டிய நபர்களான ரத்தீஷ், ஆகாஷுக்கு அமலாக்கத்துறை வலை
உதயநிதிக்கு வேண்டிய நபர்களான ரத்தீஷ், ஆகாஷுக்கு அமலாக்கத்துறை வலை

சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதிக்கு வேண்டிய நபர்களான ரத்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரனை தேடி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், 'டாஸ்மாக்' துணை பொதுமேலாளர் ஜோதி சங்கரிடம் விசாரணை நடத்தினர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அதிபர்களின் வீடுகளில், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
அவற்றை ஆய்வு செய்தபின், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அதன் அடிப்படையில், கடந்த 16, 17ல், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உட்பட, 12 இடங்களில் மீண்டும் சோதனை நடத்தினர்.
அதில், 'பார் டெண்டர்' மற்றும் மதுபானங்கள் கொள்முதல் தொடர்பாக, ரத்தீஷ் என்பவருடன் விசாகன், 'வாட்ஸாப்' வாயிலாக உரையாடல் நடத்திய தகவல் தெரியவந்தது.
இதையடுத்து, பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி., நகரில் உள்ள ரத்தீஷ் வீட்டில் சோதனை நடத்தினர்.
இதை முன்கூட்டியே அறிந்த ரத்தீஷ் தலைமறைவாகி விட்டார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அவர், துணை முதல்வர் உதயநிதியின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது.
ரத்தீஷ் வெளிநாட்டிற்கு தப்பி இருக்கலாம் என்பதால், சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் விசாரித்தனர்.