மொபைல் போன் வாங்க ரூ.10,000! ஊழியர்களுக்கு தருகிறது மின்வாரியம்
மொபைல் போன் வாங்க ரூ.10,000! ஊழியர்களுக்கு தருகிறது மின்வாரியம்
மொபைல் போன் வாங்க ரூ.10,000! ஊழியர்களுக்கு தருகிறது மின்வாரியம்
ADDED : மார் 24, 2025 05:44 AM

சென்னை: மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், மொபைல் போன் அல்லது, 'டேப்லெட்' வாங்கும் விலையில், 10,000 ரூபாய் வழங்க, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை, மின்வாரிய ஊழியர்கள் கணக்கு எடுக்கின்றனர். இதற்காக, கணக்கெடுப்பு செயலி ஊழியர்களின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து தரப்பட்டுள்ளது.
மேலும், ஒரு, 'ஆப்டிகல் பைபர்' கேபிளும் வழங்கப்பட்டுள்ளது. இதை, மீட்டர் மற்றும் மொபைல் போனுடன் இணைத்து செயலியை இயக்கியதும், மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டு விபரம் செயலியில் பதிவேற்றப்படும்.
அதை தொடர்ந்து, மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, அலுவலக, 'சர்வர்' மற்றும் மின் நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., செல்லும். சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம், படிப்படியாக மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மொபைல் போன் செயலியில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, தனி மொபைல் போன் அல்லது கையடக்க கணினியான, 'டேப்லெட்' வாங்கி தருமாறு, மின் வாரியத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், மொபைல் போன் அல்லது, 'டேப்லெட்' வாங்கும் விலையில், 10,000 ரூபாய் வழங்க, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மொபைல் போன் வாங்கிய பின், அதன் விலையில், 10,000 ரூபாயை மட்டும் நிர்வாகம் வழங்கும். இதற்கு பதில் நிர்வாகமே மொபைல் போன் வாங்கி தருமாறு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக, 'எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன்' பொதுச்செயலர் சேக்கிழார் கூறியதாவது:
மொபைல்போனுக்கு, 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று, உச்சவரம்பு நிர்ணயிக்க கூடாது. தரமான போன் வாங்கினால் அதிக நாள் வரும். எனவே, சந்தையில் முன்னணி நிறுவனத்தின் மொபைல் போன் என்ன விலைக்கு வாங்கப்படுகிறதோ, அந்த தொகை முழுதும் தர வேண்டும்.
இல்லையெனில், நிர்வாகமே தரமான போன் அல்லது 'டேப்லெட்' வாங்கி தர வேண்டும். அதுமட்டுமின்றி, மொபைல் போன் செயலியை இயக்குவதற்கான, 'இன்டர்நெட்' கட்டணத்தையும் ஊழியர்களுக்கு, நிர்வாகம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.