தமிழக அரசை நம்ப வேண்டாம் எம்.பி., பிப்லப் குமார் தேவ் பேச்சு
தமிழக அரசை நம்ப வேண்டாம் எம்.பி., பிப்லப் குமார் தேவ் பேச்சு
தமிழக அரசை நம்ப வேண்டாம் எம்.பி., பிப்லப் குமார் தேவ் பேச்சு
ADDED : ஜன 29, 2024 01:52 AM

தி.நகர்:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பாரம்பரிய தொழில்களை ஊக்குவிப்பதற்காக,'விஸ்வகர்மா' திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இந்த திட்டத்தை தமிழகம் முழுதும் விரிவுபடுத்த பா.ஜ., முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் நேற்று, தி.நகரில் உள்ள பா.ஜ., மாநில அலுவலகமான கமலாலயத்தில், விஸ்வகர்மா திட்டம் பயிற்சி வகுப்பு துவங்கியது. திரிபுரா முன்னாள் முதல்வரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான பிப்லப் குமார் தேவ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி, மக்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சந்திக்கிறார். 600 ஆண்டுகள் முகலாயர்கள், 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சி நடத்தியும், அவர்கள் செய்ய முடியாத சாதனையை, 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்துள்ளார்.
விஸ்வகர்மா திட்டம் மூலம் பாரம்பரிய தொழில் செய்வோர் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர்.
தி.மு.க., அரசு இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. சனாதன தர்மத்தை எதிர்க்கிறோம் என, அமைச்சர் உதயநிதி சொல்கிறார். ஆனால் அவர்கள், நாங்கள் கூறும் 18 பயனாளிகளுக்கு ஒன்றுமே செய்ததில்லை.
தமிழில் பேசுவதற்கு நான் ஆசைப்படுகிறேன். ஹிந்தியில் பேசுவதற்கு கர்வம் அடைகிறேன். மணிப்பூர், மிசோரம், என் மாநிலமான திரிபுராவில், 90 சதவீதம் பேர் ஹிந்தி பேசுகின்றனர்.
இதற்கு, பிரதமர் மோடி தான் காரணம்.
நாட்டில் உள்ள தியாகம் செய்தவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக தான், தி.மு.க., அரசு இருந்துள்ளது. அப்துல் கலாமுக்கும் அவர்கள் தடையாக தான் இருந்தனர்.
தமிழகத்தில் பா.ஜ., உத்வேகமாய் செயல்படுகிறது. விஸ்வகர்மா திட்டத்தை நோக்கி செல்வதில், நாம் மக்களை தலைவர்களாக பார்க்கிறோம்.
குறைந்தபட்ச நபர்கள் கொண்டு தான் விஸ்வகர்மா திட்டம் துவங்கியது. ஆனால், விஸ்வகர்மா திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 58,000 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு நேரடியாக சலுகைகள் அளிக்கும். தமிழக அரசை நம்ப வேண்டாம். மாற்றம் என்பது உங்களிடம் இருந்து தான் வரும்.
வரும் 2024 லோக்சபா தேர்தல், அடுத்து வரும் தமிழக சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., ஆட்சி அமைவதற்கு உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விஸ்வகர்மா திட்டம் பயிற்சி வகுப்பில் சென்னை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பா.ஜ.,வினர் பங்கேற்றனர்.
அவரவர் மாவட்டங்களில் விஸ்வகர்மா திட்டத்தில் பதிவு செய்த நபர்களின் விண்ணப்பங்களை, பிப்லப் குமார் தேவிடம் கொடுத்தனர்.