ஜாதி பார்த்து ஓட்டளிக்க வேண்டாம்: சொல்கிறார் சீமான்
ஜாதி பார்த்து ஓட்டளிக்க வேண்டாம்: சொல்கிறார் சீமான்
ஜாதி பார்த்து ஓட்டளிக்க வேண்டாம்: சொல்கிறார் சீமான்
UPDATED : ஜூன் 26, 2024 05:34 PM
ADDED : ஜூன் 26, 2024 04:59 PM

விக்கிரவாண்டி: ஜாதி பார்த்து ஓட்டளிக்க வேண்டாம். அது எங்களுக்கு தீட்டு என சீமான் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா அறிமுக கூட்டம் நடந்தது. விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் எதிரே நடந்த கூட்டத்தில், கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
தமிழக வரலாற்றில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும். தி.மு.க., ஆட்சியில் அதுதான் நடக்கும். அதனால் தான் அ.தி.மு.க., தேர்தலை புறக்கணித்துவிட்டது. நாட்டை ஆளும் பா.ஜ., இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.க.,வுடன் நேருக்கு நேர் மோத நாம் தமிழர் கட்சி தயார்.
ஒழிக்கப்பட வேண்டியது திராவிடம். திராவிட முதுகில் இந்திய தேசியம் சவாரி செய்கிறது. திராவிடம் தவறு செய்கிறது. இதனை தடுக்க தமிழ் தேசியம் முயல்கிறது. ஏன் மீண்டும், மீண்டும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடுகிறீர்கள். காவல் துறையினர், ராணுவ வீரர்கள், மீனவர்கள் இறந்துள்ளனர். அவர்களுக்கு இந்த திராவிட கட்சிகள் நிவாரணம் தரவில்லை.
மது ஆலைகள்
ஆனால், சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இந்த அரசு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளது. இதற்கு, மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பனம்பால், தென்னம்பால் விற்பனை செய்யப்படும். தமிழகத்தை ஆண்ட தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டு கட்சிக்கும் மது ஆலைகள் உள்ளது. அதனால் டாஸ்மாக் கடையை மூடமாட்டார்கள்.
ஜாதி பார்த்து ஓட்டளிக்க வேண்டாம். அது எங்களுக்கு தீட்டு. உதயசூரியன் சின்னத்தை மறந்து மைக் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள். பொது எதிரி தி.மு.க.,வை வீழ்த்த நமக்கான ஒரே வாய்ப்பு இந்த தேர்தல். இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., கட்சிகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.