Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கூட்டணி கட்சிக்கு சிதம்பரம் மற்றும் உசிலம்பட்டியை ஒதுக்க வேண்டாம்: முதல்வரிடம் கட்சியினர் வலியுறுத்தல்

கூட்டணி கட்சிக்கு சிதம்பரம் மற்றும் உசிலம்பட்டியை ஒதுக்க வேண்டாம்: முதல்வரிடம் கட்சியினர் வலியுறுத்தல்

கூட்டணி கட்சிக்கு சிதம்பரம் மற்றும் உசிலம்பட்டியை ஒதுக்க வேண்டாம்: முதல்வரிடம் கட்சியினர் வலியுறுத்தல்

கூட்டணி கட்சிக்கு சிதம்பரம் மற்றும் உசிலம்பட்டியை ஒதுக்க வேண்டாம்: முதல்வரிடம் கட்சியினர் வலியுறுத்தல்

ADDED : ஜூன் 14, 2025 03:37 AM


Google News
Latest Tamil News
சென்னை,: முதல்வர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசியபோது, சிதம்பரம், உசிலம்பட்டி சட்டசபை தொகுதிகளை, வரும் தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டாம் என, நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை அறிவாலயத்தில், 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில், கட்சி நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் தனித்தனியே சந்தித்து பேசும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.

முதல் நாளில், சிதம்பரம், உசிலம்பட்டி, விருதுநகர் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும், முதல்வர் தனித்தனியே அழைத்து பேசினார்.

எதிர்பார்ப்பு


அப்போது, தி.மு.க., ஆட்சியை பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர். தி.மு.க., அரசு செய்த மக்கள் நலத் திட்டங்கள் குறித்து, மக்களின் மனநிலை; மக்களின் எதிர்பார்ப்பு; கூட்டணி கட்சியினரின் நிலைப்பாடு; தொகுதி எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடு, அவர்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு; தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்; கட்சி நிர்வாகிகள் எதிர்பார்ப்பு; கட்சி தலைமை செய்ய வேண்டிய உதவி என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை, முதல்வர் கேட்டறிந்தார்.

அப்போது, சிதம்பரம், உசிலம்பட்டி நிர்வாகிகள், தங்கள் தொகுதி கூட்டணி கட்சிகளுக்கே தொடர்ந்து வழங்கப்படுகிறது. இம்முறை, அதை மாற்றி, தி.மு.க., போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர்.

சந்திப்பின்போது, முதல்வருடன், கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைப்பு துணை செயலர்கள் அன்பகம் கலை, ஆஸ்டின் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்.

''தி.மு.க., அரசின் சாதனைகளை, மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். எந்த பிரச்னையாக இருந்தாலும், தலைமையிடம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்'' என்றார்.

'ஒன் டூ ஒன்'


நிகழ்ச்சி முடிந்த பின், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி:

வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க, 234 தொகுதிகளில் உள்ள, நகர, ஒன்றிய, பேரூர், தி.மு.க., நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் 'ஒன் டூ ஒன்' சந்தித்து, கருத்துக்களை கேட்கும் நிகழ்ச்சியை துவக்கி உள்ளார். நேற்று சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து பேசினார். நிறைய விஷயங்களை நிர்வாகிகள் கூறினர்.

முதல்வரும், அவர்கள் கருத்துக்களை ஏற்றதோடு, தேவையான விளக்கங்களையும் அளித்தார். ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. நேற்று காலை 10:30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி, மதியம் 1:30 மணி வரை நீடித்தது.

வரும் 20ம் தேதியில் இருந்து, ஒவ்வொரு பூத் கமிட்டியிலும், 30 சதவீதம் புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். அதற்கு எப்படி பணியாற்ற வேண்டும் என, முதல்வர் ஆலோசனை வழங்கினார்.

வரும் 17, 18, 19, 20ம் தேதிகளில், கட்சியினரை முதல்வர் சந்திக்க உள்ளார். செப்., மாதத்திற்குள் அனைத்து தொகுதி நிர்வாகிகளையும் சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அறிவாலயத்தில் புகார் பெட்டி!

சட்டசபை தொகுதி நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் சந்திக்கும்போது, நேரடியாக கருத்துக்களை தெரிவிக்க தயங்குவோர், கடிதம் வாயிலாக தெரிவிக்க வசதியாக, அறிவாலயத்தில் புகார்பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதில், தொகுதிவாரியாக போடப்படும் கடிதங்களை பிரித்து படித்து, உளவுத்துறை வாயிலாக உண்மைத் தன்மை அறியப்படும். பின், சொல்லப்பட்டிருக்கும் தகவலில் உண்மை இருந்தால், அது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, தனிக்குழு அமைக்கப்பட உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us