வங்கி அக்கவுன்ட் ஓபன் செய்து கொடுக்காதீங்க: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
வங்கி அக்கவுன்ட் ஓபன் செய்து கொடுக்காதீங்க: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
வங்கி அக்கவுன்ட் ஓபன் செய்து கொடுக்காதீங்க: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ADDED : மார் 25, 2025 06:12 AM

திண்டுக்கல்; மற்றவர்கள் கேட்டால் வங்கியில் அக்கவுன்ட் ஓபன் செய்து கொடுப்பது, முகவரி உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து சிம் கார்டுகளை கொடுக்காதீங்க என திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் டிரேடிங் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம், வேலை தருவதாக மோசடி, குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருகிறோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையில் தற்போது மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதில் பேராசைப்படும் வாலிபர்கள், விரைவில் சம்பாதிக்க நினைப்பவர்கள் சிக்கி பணத்தை இழக்கின்றனர். பணம் இல்லாதவர்கள் கடன்வாங்கி ஆன்லைன் மோசடியில் சிக்கி ஏமாறுகின்றனர். இதுகுறித்து சிலர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கின்றனர்.
இதுபோன்ற புகார்கள் தினமும் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு ஆன்லைனில் குவிந்து வருகிறது. நேரிலும் சிலர் புகார் கொடுக்கின்றனர். இம்மோசடிகளில் பெரும்பாலும் வட மாநில வாலிபர்களே ஈடுபடுகின்றனர்.
புகார்கள் மீது போலீசார் விசாரணை செய்து குற்றவாளிகளை வெளி மாநிலங்களுக்கு சென்று பிடிக்கின்றனர். இதில் மூளையாக செயல்பட்ட நபர்கள் இதுபோன்ற மோசடிகளுக்காக தன் வங்கி கணக்குகள், அலைபேசிகளை பயன்படுத்தாமல் மற்றவர்களுடைய வங்கி கணக்குகள், சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர்.
போலீசார் மோசடி தொடர்பாக முதற்கட்டமாக பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்கின் முகவரியை தான் தேடுகின்றனர். அதில் சிக்குபவர்கள் பலர் அப்பாவிகளாக இருக்கின்றனர். இருந்தபோதிலும் வேறு வழியின்றி அவர்களையும் போலீசார் கைது செய்ய வேண்டியுள்ளது.
இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க யாருக்கும் வங்கி கணக்குகள், சிம் கார்டுகள் பெற முகவரி உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்க வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.