2026ல் தி.மு.க.ஆட்சிக்கு பூட்டு போடவேண்டும் - பா.ஜ.மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு
2026ல் தி.மு.க.ஆட்சிக்கு பூட்டு போடவேண்டும் - பா.ஜ.மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு
2026ல் தி.மு.க.ஆட்சிக்கு பூட்டு போடவேண்டும் - பா.ஜ.மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு
ADDED : செப் 22, 2025 04:06 AM

திண்டுக்கல்: 2026ல் தி.மு.க., ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில் பேசிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் உள்பட மதுரை மண்டலத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது.
மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது: கடந்த ஆட்சியில், கேடுகெட்ட அமைச்சரை வைத்து ஆட்சி நடத்துவதாக செந்தில் பாலாஜியை ஸ்டாலின் விமர்சனம் செய்தார். ஆனால் இன்றோ, கோடு போட்டால் ரோடு போடும் பாலாஜி என அவரையே புகழ்ந்து பேசுகிறார். ஆனால் பா.ஜ.,வில் இருப்பவர்கள் எல்லோரும், ரோடு போட்டு மேம்பாலத்தையே கட்டும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவர்கள்.
தமிழகத்தின் தீயசக்தி தி.மு.க., என்று எம்.ஜி.ஆர்., சொன்னார். அவர் இறக்கும் வரை தி.மு.க., ஆட்சிக்கே வரமுடியவில்லை. தி.மு.க., அரசு, மக்கள் மீது அக்கறையாக இல்லை. சட்டம் ஒழுங்கு சுத்தமாக இல்லை. தென்மாவட்டங்களில் இனப்படுகொலை நடக்கிறது. ஆனால் போலீசார் எதையும் கண்டுகொள்ளவில்லை.
இந்த தீபாவளி நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கவேண்டுமென ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்படுத்தும் அநேக பொருளின் வரிகள் நீக்கப்பட்டுள்ளது. 2026 சட்டசபை தேர்தல் மூலமாக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தி.மு.க.வின் ஆட்சியை விரட்டுவதற்கும், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவதற்கும் பாடுபட வேண்டும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. திண்டுக்கலுக்கு சிறப்பு பூட்டு...2026ல் தி.மு.க., ஆட்சிக்கு பூட்டு போடும் வகையில் அனைவரும் ஒருமித்து பாடுபடவேண்டும்' என்றார்.
அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் பேசியது: பா.ஜ., ஆளும் மாநிலங்களில் தொழில் புரட்சி, பொருளாதார புரட்சி ஏற்படுகிறது. மிகப்பெரிய வளர்ச்சி மாற்றங்களை சந்திக்கின்றன. வடமாநிலங்களில் வலுவான பூத் கமிட்டி பா.ஜ.,வுக்கு உண்டு.
மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் பேசியது: ஜி.எஸ்.டி. புரட்சி நடந்திருக்கிறது. நாட்டு மக்களுக்கு புதிய விடியல் ஆட்சியை மோடிதான் தந்துள்ளார். விடியல் ஆட்சி என்று சொல்லும் தி.மு.க., வெட்கப்பட வேண்டும். இன்னும் 7 அமாவாசை கழிந்தால் தமிழகத்தில் பா.ஜ.,ஆட்சி எனும் பவுர்ணமி வரும். நாட்டின் பொருளாதாரம் ஒன்றரை கோடியிலிருந்து டிரில்லியன் இருந்து, நான்கரை கோடி டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. விரைவில், அமெரிக்கா பொருளாதாரத்தை விட இந்தியா பொருளாதாரம் அதிகமாகும்.
முன்னாள் மாநில தலைவர் தமிழிசை: தமிழகத்தில், தி.மு.க.வுக்கு எதிராக கலாசார போர் நடத்த உள்ளோம். தமிழன் தொன்மையை, உலகுக்கு காண்பிப்பதில் மோடியை விட மேன்மையானவர் இல்லை. மத்திய அரசின் செயலுக்கு கருப்புக்கொடி கட்டியவர்களை, காவி வெல்லும்.
மகாபாரத்திற்கும், கீழடிக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை நிருபித்து காட்டுவோம். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. ஊழல் ஆட்சி நடக்கிறது. மழைபெய்தால் குளத்தில் நீர் நிரம்பி வட்ட இலையில் தாமரை மலரும். அதுபோல தமிழகத்தில், இரட்டை இலையோடு தாமரை மலரும்.
கூட்டத்தில் தேசிய பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலத் துணை தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.