திமுக கூட்டணி தானாக உடையும்: இபிஎஸ்
திமுக கூட்டணி தானாக உடையும்: இபிஎஸ்
திமுக கூட்டணி தானாக உடையும்: இபிஎஸ்
ADDED : செப் 10, 2025 10:51 PM

வால்பாறை: திமுக கூட்டணியை நாங்கள் உடைக்கத் தேவையில்லை. நீங்களே உடைந்து போவீர்கள். ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சி அப்படித்தான் பேசுகிறார்கள் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் பேசினார்.
பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: இன்றைக்கு மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்தில் மூன்றாண்டு திமுக ஆட்சியில் 68 ஆயிரம் கோடி தான் முதலீடு செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆக, அத்தனையும் பச்சை பொய். மக்களை ஏமாற்றுகிறார்கள். அறிவிப்பு எல்லாமே காகிதத்தில் தான் உள்ளது. அதிமுக, திமுக ஆட்சியை ஒப்பிட்டுப் பாருங்கள். அதிமுக ஆட்சியில் நாங்கள் சொல்வது நடக்கும். திமுக ஆட்சி என்பது சொல்வதற்கு நேர்மாறாகத்தான் நடக்கும்.
இபிஎஸ் ஆம்புலன்ஸ் போறதுக்கு வழிவிடவில்லை என்று தவறான தகவலை உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். கூட்டத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு இடையூறு செய்வதற்காக ஆம்புலன்சை அனுப்பி திமுக தந்திரம் செய்கிறது. தில்லு திராணி இருந்தால் நேரடியாக எதிர்க்க வேண்டும். இப்படி குறுக்கு வழியில் மோதக்கூடாது.
அதிமுக ஐசியுவில் இருக்கிறது என்கிறார். திமுகதான் ஐசியுவுக்கு போயாச்சு. ஆபத்தான நிலையில் பேஷன்ட்டுக்கு வென்டிலேட்டர் வைப்பார்கள். அப்படித்தான் திமுக நிலை இருக்கிறது. மக்கள் உங்கள் அதிகாரத்தைப் பறிக்க இன்னும் 7 மாதம் மட்டுமே இருக்கிறது. அதுக்குள் இந்த ஆட்டம் போடவேண்டாம். மக்கள் நினைத்தால்தான் யாரும் ஆட்சிக்கு வரமுடியும். இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு வால்பாறையில் ஆனைமலை பொள்ளாச்சி சாலையில் இபிஎஸ் பேசியதாவது: அதிமுக மூன்றாக, நான்காகப் போய்விட்டது என்கிறார்கள். எல்லாமே ஒன்றாக இருக்கிறது என்பதை சட்டமன்றத் தேர்தலிலே காண்பிப்போம். இப்படி டிவியிலும் பத்திரிகையிலும் நீங்கள் வைத்திருக்கும் நிறுவனம் மூலமாக அவதூறு பிரசாரம் பரப்பிவருகிறீர்கள். திமுகவினர் கூட்டணி பலத்துடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை மக்களையே நம்பியிருக்கிறது.
அதிமுகவுக்கும் பாஜவுக்கும் தனித்தனி கொள்கை உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. தனித்தனி கட்சி நடத்த வேண்டிய அவசியமில்லை. திமுக அப்படியல்ல, கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றி விழுங்கிக் கொண்டிருக்கிறது. உஷாராக இருந்தால் நீங்கள் உங்கள் கட்சியைக் காப்பாற்றிக்கொள்ளலாம் இல்லையெனில் தேர்தலுக்குள் உங்கள் கட்சியை திமுக விழுங்கிவிடும். கூட்டணியை உடைப்பதற்காக இபிஎஸ் பேசுவதாகச் சொல்கிறார்கள், நாங்கள் உடைக்கத் தேவையில்லை, நீங்களே உடைந்துபோவீர்கள். ஏனென்றால், கம்யூனிஸ்ட் கட்சி அப்படித்தான் பேசுகிறார்கள். 98% வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, தவறான கணக்காக இருக்குது என்கிறார்கள். அப்படியெனில் கூட்டணிக்குள் முரண்பட்ட கருத்து இருக்குது என்றுதானே அர்த்தம். தேர்தல் வரை தாக்குப்பிடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.