Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நன்றி சொல்ல வந்த இடத்தில் மக்களை திட்டித்தீர்த்த இயக்குனர் தங்கர் பச்சான்

நன்றி சொல்ல வந்த இடத்தில் மக்களை திட்டித்தீர்த்த இயக்குனர் தங்கர் பச்சான்

நன்றி சொல்ல வந்த இடத்தில் மக்களை திட்டித்தீர்த்த இயக்குனர் தங்கர் பச்சான்

நன்றி சொல்ல வந்த இடத்தில் மக்களை திட்டித்தீர்த்த இயக்குனர் தங்கர் பச்சான்

ADDED : ஜூன் 18, 2024 05:16 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கடலூர்: கடலூர் லோக்சபா தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான், 3வது இடம் பிடித்து தோற்றார். ஓட்டளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த அவர், 'எதுக்கு உங்களுக்கெல்லாம் ஓட்டு? எதுக்கு தேர்தல்? இந்த கடலூர் மாவட்டத்துல பிறந்தது அவமானமா இருக்கு' என கோபமாக பேசியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் கடலூர் தொகுதி பாமக.,வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் பாமக சார்பில் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிட்டார். ஜூன் 4ல் வெளியான தேர்தல் முடிவுகளில் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1.85 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். தேமுதிக.,வின் சிவகொழுந்து 2வது இடத்தையும், பாமக.,வின் தங்கர்பச்சான் 3வது இடத்தையும் பிடித்தனர்.

தங்கர்பச்சான் வாங்கிய ஓட்டுகள் 2,05,244 (19.9 சதவீதம்). தேர்தலில் தோல்வியடைந்தாலும், தனக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்கு தங்கர் பச்சான் சென்றுள்ளார். அப்போது திறந்தவேனில் நின்று அவர் பேசியதாவது:

என்னை பார்ப்பவர்கள் நீங்கள் எப்படிப்பட்ட படங்களை எடுப்பவர், தயவு செய்து உங்களுக்கு அரசியல் வேண்டாம் என்று சொல்கிறார்கள். அரசியலை தூய்மையாக்கவே நான் வந்துள்ளேன். வெற்றி, தோல்வி எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது.



வாய் இருக்குல்ல..


யார் எப்படியோ என்னுடைய மக்களை விட்டுவிட்டு நான் போக முடியாது. மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி பாமக. ஆளுங்கட்சியினர் மக்களுக்காக வரமாட்டார்கள். அவர்களுக்கு மணல் திருட்டு, காண்டிராக்ட் எடுப்பது, சாராயம் விற்பது என பல வேலைகள் இருக்கு. மக்களாகிய நீங்களும் ஊமையா இருங்க. ஒருநாள் போராட்டம் நடத்துங்க.. வாய் இருக்குல்ல.. வாயை வச்சிகிட்டு என்ன பண்றீங்க? போராட்ட குணம் இல்லாத மக்கள் எதுக்கு உங்களுக்கெல்லாம் ஓட்டு? ஓட்டை வச்சு என்ன செய்ய போறீங்க? வாய் இருந்தா தான் பிழைக்க முடியும்.

இல்லைனா உங்க பிள்ளைங்களும் அந்த சின்னங்களுக்கே ஓட்டு போட்டு அடிமையாகி செத்தே போயிடும். உங்களுக்கு தேர்தல்லாம் விளையாட்டா இருக்கு. நல்ல உடை உடுத்திக்கொண்டு, மேக்கப் போட்டுக்கொண்டு, விரலில் மை பூசிவிட்டு, வீட்டில் வந்து டிவி பார்ப்பது தான் தேர்தலா? தேர்தல் கொண்டாட்டம் எல்லாம் ஒரே நாளில் முடிந்துவிட்டது. அதன்பிறகு அவர்கள் அவர்களின் வேலையை பார்க்கின்றனர்; நீங்கள் உங்கள் வேலையை பார்க்கிறீர்கள்.

அவமானம்


எதுக்கு உங்களுக்கெல்லாம் ஓட்டு? எதுக்கு தேர்தல்? நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுகளிலும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இருக்கிறது. அதை தேர்ந்தெடுப்பது இதுவரை உங்களுக்கு தெரியல. எனக்கு இது அவசியமற்ற ஒன்று. இனிமேலாவது மாறுங்கள். எனக்கு இந்த கடலூர் மாவட்டத்துல பிறந்தது அவமானமா இருக்கு. என்னை மதித்து ஓட்டளித்தவர்களுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us