Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/'தினமலர்- பட்டம்' வினாடி வினா துளிகள்

'தினமலர்- பட்டம்' வினாடி வினா துளிகள்

'தினமலர்- பட்டம்' வினாடி வினா துளிகள்

'தினமலர்- பட்டம்' வினாடி வினா துளிகள்

ADDED : ஜன 07, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
பூக்கள் கொடுத்து வரவேற்ற மழலைகள்

சிறப்பு விருந்தினர்கள் கவர்னர் தமிழிசை, இஸ்ரோ சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விழாவில் பங்கேற்க வந்தனர். அவர்களை வாசலில் மழலைகள் வரிசையாக நின்று பூக்கள் கொடுத்து வரவேற்றனர். பூக்களுடன் வரவேற்ற குழந்தைகளுக்கு முகமலர்ச்சியுடன் சிறப்பு விருந்தினர்கள் தட்டி கொடுத்து வாழ்த்தினர்.

சவால் கொடுத்த அரசு பள்ளிகள்

வினாடி வினா போட்டியில் எப்போதும் தனியார் பள்ளிகளே ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இம்முறை தனியார் பள்ளி மாணவர்களுடன் அரசு பள்ளி மாணவர்கள் கடும் சவால் கொடுத்தனர். இறுதி சுற்றுக்கான தகுதி எழுத்து தேர்வினை, 80 அரசு பள்ளிகளின் அணிகள் எதிர்கொண்டன.

செல்பி எடுக்க ஆர்வம்

'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி நடந்த ஜிப்மர் வளாகத்தில், வாழ்வில் உயர்ந்த இலக்கினை எட்டி பிடிக்க கனவு காணும் வகையில், சந்திரயான் ராக்கெட் மாதிரியும், மகிழ்ச்சியாக சவாலை எதிர்கொண்டு சிறக்கடிக்க பட்டர்பிளை செல்பி பாயிண்ட் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த இரு இரண்டு இடங்களிலும் சிறப்பு விருந்தினர்களுடன் செல்பி எடுக்க மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆர்வம் காட்டினார். தனியாகவும் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.

சந்திரயான் திட்ட இயக்குனரை காண ஆர்வம்

அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிலவில் கால் பதித்தாலும் தென் துருவத்தில் கால் பதிப்பது என்பது இந்நாடுகளுக்கு சவாலாகவே மாறியது. ஆனால் இந்த சவாலை சாதனையாக்கியது இந்தியா.

உலகம் போற்றும் இந்த சாதனைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இஸ்ரோ சந்திராயன்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்.

'தினமலர்' வினாடி வினா போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவரை காண, மாணவர்கள், ஆசிரியர்கள் முண்டியடித்தனர். ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் காரில் இருந்து இறங்கியது முதல் நிகழ்ச்சி முடிந்து, மீண்டும் காரில் ஏறும் வரை அவருடன் 'செல்பி' எடுக்க ஆர்வம் காட்டினர்.

நச்சு பாம்பு கடியிலும் சாதித்த மாணவர்

வினாடி வினா போட்டியில், ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர் பள்ளி அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவர்கள் லக் ஷன் மற்றும் மோனிஷ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில், மாணவர் மோனிஷ் நடக்க முடியாமல் காலில் கட்டுபோட்டப்படி சேரில் துாக்கிவரப்பட்டார். மேடையிலும் துாக்கிக்கொண்டு அமர வைக்கப்பட்ட அவர், தன்னம்பிக்கையுடன் இறுதி சுற்றிலும் அசத்தி தனது பள்ளி நான்காம் இடத்தை பிடிக்க காரணமாக இருந்து பெருமை சேர்ந்தார். அவருடைய தன்னம்பிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இது குறித்து மாணவர் மோனிஷ் கூறுகையில், 'கடந்த டிசம்பரில், வீட்டு அருகே கிரிக்கெட் விளையாட சென்றபோது நல்ல பாம்பு தீண்டியது. உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டினாலும் நடக்க முடியவில்லை. வினாடி வினா போட்டியில் பங்கேற்க முடியுமா என நண்பர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் 'தினமலர்' மெகா போட்டியை மிஸ் பண்ண மனசு இல்லை. என்ன இருந்தாலும் பங்கேற்க வேண்டும் என, வைராக்கியத்துடன் முடிவு செய்தேன். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பில், போட்டிக்கு தயராகி, நான்காம் இடத்தையும் பிடித்தது மகிழ்ச்சியளிக்கின்றது என்றார்.

தினமலருக்கு கவர்னர் பாராட்டு

கவர்னர் தமிழிசை பேசுகையில், 30 ஆயிரம் பேர் பங்கேற்கும் வினாடி வினா போட்டியை நடத்துவது என்பது சாதாரணமானது அல்ல. இதற்காக 'தினமலர்' நாளிதழ் மற்றும் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமனை பாராட்டுகின்றேன் என்றார்.

'எங்க வீட்டிலும் குவிஸ் தான்'

கவர்னர் தமிழிசை பேசுகையின், எனது தந்தை குமரிஅனந்தன் சிறந்த தலைவர்; பேச்சாளர். 90 வயதான அவர் தெலுங்கானவில் என்னுடன் இருக்கிறார். ஒருநாள் திடீரென அவர், முதல் பெண் ஆளுநர் யார் என்று கேள்வி எழுப்பினார். அதனை கேட்ட நான், சரோஜினி நாயூடு என்றேன். இந்த பதிலை சற்று எதிர்பாராத அவர், என்னுடைய மகள் என்று நிருபித்துவிட்டாய் என்று கைதட்டி பாராட்டினார். இப்படி எங்க வீட்டிலும் அடிக்கடி குவிஸ் நடக்கும் என்றதும், மேடை கலகலப்பானது.

'மாணவர்களுக்காக கைதட்டிய கவர்னர்'

நிறைய படித்து மார்க் வாங்குவது போல கொஞ்சம் படித்து யோகா செய்தால் படித்தது நினைவில் நிற்கும். சிறிய சிறிய யோகாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் செய்த கவர்னர் தமிழிசை, படிப்பு மட்டுமின்றி கலைகளை யார் கொண்டு வருகின்றீர்கள் என, மாணவர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வி பெரும்பாலான மாணவர்கள் கையை உயர்த்தினர். இதனை கண்ட கவர்னர் தமிழிசை, இது நல்ல பழக்கம். உங்களுக்காக நான் கைதட்டுகிறேன் என, கைதட்டி உற்சாகப்படுத்த, அரங்கமும் கைதட்டல்களால் அதிர்ந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us