'1,000 ஆண்டுகளுக்கு முன் அணைகளை கட்டிய பெருமை தமிழர்களுக்கு உண்டு' துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
'1,000 ஆண்டுகளுக்கு முன் அணைகளை கட்டிய பெருமை தமிழர்களுக்கு உண்டு' துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
'1,000 ஆண்டுகளுக்கு முன் அணைகளை கட்டிய பெருமை தமிழர்களுக்கு உண்டு' துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
ADDED : செப் 14, 2025 06:03 AM

சென்னை: “அனைத்து துறைகளிலும் சிறப்பு வாய்ந்தவர்களாக பொறியாளர்கள் உள்ளனர்; 1,000 ஆண்டுகளுக்கு முன்பே மிகப்பெரிய கட்டுமானங்கள், அணைகளை கட்டிய பெருமை நம் தமிழர்களுக்கு உண்டு,” என, தமிழக துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
சர்வதேச தமிழ் பொறியாளர் மன்ற மாநாடு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில், தமிழக திறன் மேம்பாட்டு கழகம், பஹ்ரைன் நாட்டின் அஹ்லியா பல்கலை இடையே, தமிழக மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்துடன் இணைந்து, மாநில அளவில் பல்வேறு திறன் பயிற்சி அளிக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
தமிழ் பொறியாளர்களை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 1,000 ஆண்டுகளுக்கு முன்பே மிகப்பெரிய கட்டுமானங்கள், அணைகளை கட்டிய பெருமை, நம் தமிழர்களுக்கு உண்டு.
இந்த சர்வதேச மன்றத்தில், 5,000க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.
பொதுவாக, மற்ற துறைகளில் வேலை செய்பவர்கள் எல்லாம், அவரவர் துறைகளில் சிறப்பு வாய்ந்தவராக இருப்பர். ஆனால், பொறியாளர்கள் மட்டும் தான், எல்லா துறைகளிலும் சிறப்பு வாய்ந்தவர்களாக இருப்பர்.
தமிழ் பொறியாளர்கள் தங்களின் ஐடியாக்களையும், ஆதரவையும் அரசுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும்.
நீங்கள் பணி செய்யும் இடங்களில், தமிழ் இளைஞர்களுக்கு உற்ற துணையாக இருந்து, அவர்களின் வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும். இன்னும் பல நுாறு பொறியாளர்களை வெற்றிகரமான தொழில் முனைவோராக உயர்த்த, அரசு துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில், 'ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வாயிலாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி' என்ற கருத்தரங்கை துவக்கி வைத்து, அமைச்சர் அன்பரசன் பேசுகையில், “தமிழகத்தில், 36.24 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், 'உத்யம்' தளத்தில் பதிவு செய்து, 2.58 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளன,” என்றார்.
அமைச்சர்கள் சிவசங்கர், மகேஷ், சர்வதேச பொறியாளர் மன்ற நிர்வாக இயக்குநர் செல்வம், தலைவர் கிருஷ்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.