ஊதிய ஒப்பந்தம் தள்ளிவைப்பு; அரசு பஸ் ஊழியர்கள் ஏமாற்றம்
ஊதிய ஒப்பந்தம் தள்ளிவைப்பு; அரசு பஸ் ஊழியர்கள் ஏமாற்றம்
ஊதிய ஒப்பந்தம் தள்ளிவைப்பு; அரசு பஸ் ஊழியர்கள் ஏமாற்றம்
ADDED : ஜூன் 28, 2024 07:48 AM

சென்னை : தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, 15வது புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை, தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த ஜனவரி மாதத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போது, நீதிமன்றம் உத்தரவுப்படி, முத்தரப்பு பேச்சு நடத்தப்பட்டது; அதில், உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையே, லோக்சபா தேர்தல் வந்ததால், முத்தரப்பு பேச்சு தள்ளிவைக்கப்பட்டது. தேர்தல் முடிந்ததும், சட்டசபை கூட்டம் துவங்கி நடந்து வருகிறது. போக்குவரத்து துறை மானிய கோரிகையின் போது, புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட குறித்த எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பின்னரே, புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்தப்படும் என, நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, போக்குவரத்து ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முடிந்தது. புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. 2022 டிசம்பருக்கு பின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இன்னும் ஓய்வு கால பலனும் அளிக்கவில்லை.
எங்களது கோரிக்கையை ஏற்காமல், போக்குவரத்து துறை தாமதம் செய்வது, ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.