/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கவுரவ கர்னல் பதவி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கவுரவ கர்னல் பதவி
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கவுரவ கர்னல் பதவி
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கவுரவ கர்னல் பதவி
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கவுரவ கர்னல் பதவி
ADDED : ஜூன் 28, 2024 07:38 AM

கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு கவுரவ கர்னல் பதவி சின்னம் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்தியாவிலேயே கவுரவ பதவிச் சின்னத்தைப் பெறும் முதல் பெண் இவர் ஆவார்.
வேளாண் பல்கலை, அதன் இணைப்பு உறுப்புக் கல்லுாரிகளில் உள்ள தேசிய மாணவர் படைக்கு பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி ஆற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் கவுரவ கர்னல் பதவி சின்னம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் தேசிய மாணவர் படை மைய துணை இயக்குநர் ஜெனரல் காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி, துணைவேந்தருக்கு கவுரவ பதவிச் சின்னத்தை வழங்கினார்.
இந்தியாவிலேயே கவுரவ பதவிச் சின்னத்தைப் பெறும் முதல் பெண் வேளாண் பல்கலை துணைவேந்தர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், 'வேளாண் பல்கலையில் 1958ம் ஆண்டு டிஎன்4 பட்டாலியன் என்ற அமைப்பின்கீழ் என்.சி.சி., விங் அமைக்கப்பட்டது. இதில், ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் இருந்தது. இதைத்தொடர்ந்து, 2004ல் மாணவிகளும் பங்கேற்கும் வகையில் என்.சி.சி., துவங்கப்பட்டது. தற்போது பல்கலையின் 6 கல்லுாரிகளில் 350 மாணவர்களுடனும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
கோவையில் 2 பட்டாலியனில் 104 மாணவர்கள் உள்ளனர். தேசிய மாணவர் படைக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின்கீழ் கவுரவ கர்னல் பதவி சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பதவியின் வாயிலாக நாட்டுக்கு செய்ய வேண்டிய அனைத்து நலன்களையும் செய்வேன்,' என்றார்.
அதுல்குமார் ரஸ்தோகி பேசுகையில், ''எதிர்கால சந்ததியின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் சிறந்த பணியை வேளாண் பல்கலை மேற்கொண்டு வருகிறது. புத்தகங்களை வாசிப்பது, நல்ல மனிதர்களுடன் நேரம் செலவிடுவது இவை இரண்டும்தான் வெற்றிக்கான பாதை.
மாணவர்கள் தொழில்நுட்பங்களின் வாயிலாக புத்தக வாசிப்பை அதிகரிக்கலாம். நல்ல மனிதர்களை சந்திப்பதன் மூலம் நம்மை நாம் மெருகேற்றிக் கொள்ள முடியும். எனவே, நல்ல நண்பர்கள், நிறுவனம், குடும்ப உறுப்பினர்கள் என சிறந்தவற்றை தேர்வு செய்யுங்கள். சுயவிழிப்புணர்வு, சமநிலை, தைரியம், ஒழுக்கம் இந்த நான்கையும் இளைஞர்கள் கடைபிடித்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்,' என்றார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மாணவர் நல மைய முதன்மையர் மரகதம், பல்கலை தேசிய மாணவர் படை அதிகாரிகள் மனோன்மணி, சந்தோஷ் ஆகியோர் செய்திருந்தனர்.