துணை மருத்துவ கவுன்சில் தலைவர அரசு நியமிக்க ஐகோர்ட் உத்தரவு
துணை மருத்துவ கவுன்சில் தலைவர அரசு நியமிக்க ஐகோர்ட் உத்தரவு
துணை மருத்துவ கவுன்சில் தலைவர அரசு நியமிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜன 31, 2024 04:18 AM

சென்னை: தமிழ்நாடு துணை மருத்துவ கவுன்சில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை, இரண்டு மாதங்களில் நியமிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ ஆய்வகங்கள் சங்கத்தின் தலைவர் கண்ணன் தாக்கல் செய்த மனு:
தகுதி இல்லாதவர்கள், மனித உயிர்களுடன் விளையாடுவதால், கிளினிக் பதிவு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை அரசு இயற்றியது.
இந்தச் சட்டத்தின்படி, ஒவ்வொரு மாநில அரசும், மாநில கவுன்சில் ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் துணை மருத்துவ கவுன்சில் ஏற்படுத்தவில்லை. எனவே, துணை மருத்துவ கவுன்சில் ஏற்படுத்தக் கோரிய மனுவை பரிசீலிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மருத்துவ ஆய்வகங்களில் தகுதியில்லாதவர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர்.
அவர்கள் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது' என்றார்.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன், கூடுதல் பிளீடர் கிருஷ்ணராஜா ஆஜராகி, ''சட்டப்படி, மாநில கவுன்சில் ஏற்படுத்தப்பட்டு விட்டது.
தகுதியான உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அதன் பணிகள், இரண்டு மாதங்களில் முடியும்,'' என்றனர்.
மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
தகுதியில்லாதவர்களை ஆய்வகங்களில் நியமிப்பது, தரம் குறைந்த சாதனங்களை பயன்படுத்துவது என, மனுதாரர் தரப்பில் பல குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றை மாநில கவுன்சில் தான் தாமதமின்றி ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில கவுன்சிலுக்கு இரண்டு மாதங்களில், தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். இந்தக் குழு, அவ்வப்போது தமிழகம் முழுவதும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வகங்களில் தகுதியானவர்கள் பணியாற்றுகின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். விதிமீறல் நடந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.