நீதிமன்ற நிதி கையாடல் மாஜி ஊழியர் சொத்து முடக்கம்
நீதிமன்ற நிதி கையாடல் மாஜி ஊழியர் சொத்து முடக்கம்
நீதிமன்ற நிதி கையாடல் மாஜி ஊழியர் சொத்து முடக்கம்
ADDED : ஜன 02, 2024 10:20 PM
சென்னை:தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் தினகராஜா, 61. இவர், அதே பகுதியில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை பார்த்தார்; 2020 பிப்ரவரியில் ஓய்வு பெற்றார்.
நீதிமன்றத்தின் ஆவணங்களை தணிக்கை செய்த போது, 2018 - 2019ம் ஆண்டுகளில், 1.10 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, அப்போது நீதிபதியாக இருந்த தங்கவேல் உத்தரவின்படி, நீதிமன்ற ஊழியர் சித்ரா, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இப்பிரிவு போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, தினகராஜா கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, கடந்தாண்டு அமலாக்கத் துறை அதிகாரிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
தொடர் விசாரணையில், நீதிபதி கையெழுத்திட்ட காசோலையில் இருந்து, தினகராஜா பணம் எடுத்து, தன் வங்கி கணக்கில் செலுத்தியது தெரியவந்தது.
மேலும், மனைவி மணிமொழி பெயரில், பட்டுக்கோட்டையில் தரைதளத்துடன் கூடிய வீட்டை வாங்கி உள்ளார். அதில், முதல் தளத்துடன் கட்டடம் கட்ட, 31 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார்.
'இனோவா' கார் வாங்கியதுடன், மகன் வங்கி கணக்கில், 20.50 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.
இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், தினகராஜாவுக்கு சொந்தமான, 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நேற்று முடக்கினர்.