ADDED : ஜன 11, 2024 02:11 AM
சென்னை:சென்னையில் 'முரசொலி' அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளித்த புகார் குறித்து தேசிய ஆதிதிராவிட ஆணையம் விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட் நிலத்தில் தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த நிலம் ஆதிதிராவிட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலம் என பா.ஜ., பிரமுகர் சீனிவாசன், தேசிய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி முரசொலி நிர்வாகத்துக்கு 2019 நவம்பர், டிசம்பரில் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். புகாரை விசாரித்து முடிவெடுக்க ஆதிதிராவிட ஆணையத்துக்கு தடை விதிக்கவும் கோரப்பட்டது.
ஆணையம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், வழக்கறிஞர் எஸ்.திவாகர் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
புகாரை பெற்ற ஆணையம் விபரங்களை கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆதிதிராவிட மக்களின் உரிமைகளை பாதிக்கும் வகையிலான எந்த குற்றச்சாட்டையும் விசாரிக்க வேண்டிய கடமை, ஆணையத்துக்கு உள்ளது.
இந்த வழக்கைப் பொறுத்தவரை நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்ற உடன் ஆணையத்தின் விசாரணைக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருப்பது தேவையற்றது.
ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை கண்டறிய அத்தகைய நில விவகாரங்களை அணுக தேசிய ஆதிதிராவிட ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
விசாரணை நடத்தும்போது அல்லது இறுதி உத்தரவு பிறப்பிக்கும் போது ஆணையம் தன் அதிகாரங்களை மீறும் என நீதிமன்றம் அனுமானிக்க முடியாது.
எந்த அரசியல் கட்சியும் மக்களின் உரிமைகள் மீறப்படுவதை புகாராக எடுத்து வரும்போது அதை அரசியல் பழிவாங்கல் என்ற ஒரே முகாந்திரத்தின் அடிப்படையில் தள்ளுபடி செய்ய முடியாது.
ஆளும் கட்சியின் செயல்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கவனிக்கும் என்பது தெரிந்தது தான்; அது எதிர்கட்சிகளின் கடமையும் கூட.
குற்றச்சாட்டுகளில் சிறிதளவேனும் உண்மை இருப்பதற்கு ஆரம்ப முகாந்திரம் தெரிந்தால் அதை நீதிமன்றம் ஆழமாக பார்க்க வேண்டும். ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள், சட்டவிரோதமாக மற்றவர்களுக்கு மாற்றப்பட்டதாக ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நிலத்தின் தன்மை குறித்த உண்மையை கண்டறிய ஆணையம் விசாரிக்க வேண்டியுள்ளது.
ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராகி விட்டார் என்பதால் அவர் முன் ஆஜராகும்படி அனுப்பிய நோட்டீசுக்கு முக்கியத்துவம் இல்லை. எனவே விதிகளை பின்பற்றி புதிதாக நோட்டீஸ் அனுப்ப தேசிய ஆதிதிராவிட ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது.
சம்பந்தப்பட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி விசாரணை நடத்தி சட்டப்படி உரிய உத்தரவை ஆணையம் பிறப்பிக்க வேண்டும்.
மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
'விசாரணைக்கு தி.மு.க., ஒத்துழைக்க வேண்டும்
தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி' அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பட்டியல் சமூக மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. பல தளங்களில் கேள்வி எழுப்பியும் இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய தி.மு.க., தவிர்த்து வருவது பலத்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. இதுகுறித்து தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க கோரி 2019ல் பா.ஜ., தொடர்ந்த வழக்கில் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையை துவக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தி.மு.க., இனியும் விசாரணையை தள்ளிப்போட முயற்சிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். பட்டியல் சமூக மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டு கொடுக்கும் பா.ஜ.,வின் சட்ட போராட்டம் தொடரும்.
-அண்ணாமலை
தமிழக பா.ஜ., தலைவர்