பேராசிரியர், அடிப்படை வசதி பற்றாக்குறை மருந்தியல் கல்லுாரிகளுக்கு கவுன்சில் 'நோட்டீஸ்'
பேராசிரியர், அடிப்படை வசதி பற்றாக்குறை மருந்தியல் கல்லுாரிகளுக்கு கவுன்சில் 'நோட்டீஸ்'
பேராசிரியர், அடிப்படை வசதி பற்றாக்குறை மருந்தியல் கல்லுாரிகளுக்கு கவுன்சில் 'நோட்டீஸ்'
ADDED : ஜூன் 14, 2025 06:30 AM
சென்னை: பேராசிரியர்கள் பற்றாக்குறை, அடிப்படை வசதிகளில் குறைபாடு போன்ற காரணங்களை முன்வைத்து, அரசு மருந்தியல் கல்லுாரிகளுக்கு, இந்திய மருந்தியல் கவுன்சில் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
தமிழகத்தில், சென்னை மருத்துவ கல்லுாரி, மதுரை மருத்துவ கல்லுாரி கீழ் இயங்கும், அரசு மருந்தியல் கல்லுாரிகளில், பி.பார்ம்., எம்.பார்ம்., படிப்புகள் உள்ளன. இரண்டு கல்லுாரிகளிலும் தலா, 60 பி.பார்ம்., இடங்கள் உள்ளன. எம்.பார்ம்., இடங்களைப் பொருத்த வரை, சென்னையில், 40, மதுரையில் 45 இடங்கள் உள்ளன.
இத்துடன், கோவை, தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரிகளில், மருந்தியல் துறைகள் உள்ளன. அங்கு பட்டய படிப்புகள் உள்ளன.
தமிழக அரசு மருந்தியல் கல்லுாரிகளின் தரத்தை ஆய்வு செய்த, இந்திய மருந்தியல் கவுன்சில், அது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. மருந்தியல் கல்லுாரிகளில், உரிய விதிகளின்படி பேராசிரியர்கள் உள்ளனரா என்பது தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க, மூன்று மாதம் அவகாசம் அளித்துள்ளது.
இல்லையெனில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அங்கீகாரம் ரத்து செய்யப்படக் கூடிய நிலை ஏற்படும் என, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
இந்நிலையில், 'தமிழக அரசால் நடத்தப்படும் மருந்தியல் கல்லுாரிகளில், பல்வேறு குறைபாடுகள் நிலவுகிறது. அதற்கு தீர்வு காண வேண்டும்' என, தமிழக முதல்வருக்கு, இந்திய மருந்தாளுனர் சங்கம் கடிதம் அனுப்பிஉள்ளது:
அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இயங்கும் நான்கு அரசு மருந்தியல் கல்வி நிறுவனங்களுமே, இந்திய மருந்தியல் கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டவை. அங்கு போதிய எண்ணிக்கையில், பேராசிரியர்கள், பணியாளர்கள் இல்லை. வகுப்பறைகள், நுாலகங்கள், கல்வி உபகரணங்கள், அடிப்படை வசதிகள் இல்லை.
மேலும், மருந்தியல் கல்லுாரிகளுக்கு தனி முதல்வர் பதவி கிடையாது. உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் நியமனங்களில், மருந்தியல் கவுன்சில் வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப் படுவதில்லை.
இதன் காரணமாக, உரிய விதிகளின்கீழ் அனைத்து வசதிகளையும் மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றும்படி, சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு, இந்திய மருந்தியல் கவுன்சில் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.