இறந்தவர்களை அடையாளம் காண 'பயோமெட்ரிக்' விபரம் கேட்பது அபத்தமானது: ஐகோர்ட் 'குட்டு'
இறந்தவர்களை அடையாளம் காண 'பயோமெட்ரிக்' விபரம் கேட்பது அபத்தமானது: ஐகோர்ட் 'குட்டு'
இறந்தவர்களை அடையாளம் காண 'பயோமெட்ரிக்' விபரம் கேட்பது அபத்தமானது: ஐகோர்ட் 'குட்டு'
ADDED : ஜூன் 14, 2025 06:30 AM
சென்னை: இறந்த நபர்களில், அடையாளம் தெரியாதவர்களை கண்டறிய, 'பயோமெட்ரிக்' விபரங்களை வழங்க உத்தரவிடக் கோரி, திண்டிவனம் டி.எஸ்.பி., தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த, சென்னை உயர் நீதிமன்றம், இதுபோன்ற மனுவை தாக்கல் செய்தது அபத்தமானது என தெரிவித்துள்ளது.
இறந்த நபர்களில், அடையாளம் தெரியாதவர்களை கண்டறிய, அந்த நபரின் 'பயோமெட்ரிக்' விபரங்களை வழங்க, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், திண்டிவனம் டி.எஸ்.பி., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் கூறியதாவது:
நம் நாட்டில், 140 கோடி மக்கள் தொகை உள்ளது.
இதுவரை 100 கோடி மக்கள் ஆதாருக்காக பதிவு செய்திருந்தால், தீர்க்கப்படாத ஒவ்வொரு குற்ற வழக்கிலும், யு.ஐ.டி.ஏ.ஐ., இறந்தவர்களின் கைரேகை களைப் பெற்று, 100 கோடி மக்களின் 'பயோமெட்ரிக்' தரவுகளுடன் ஒப்பிடும் என்று எதிர்பார்க்கிறீர்களா.
இவ்விவகாரத்தில், திண்டிவனம் டி.எஸ்.பி., மனு தாக்கல் செய்தது அபத்தமானது. குற்ற வழக்கில் தீர்வு எட்ட, ஆதார் மட்டுமே வழி அல்ல; விசாரணைக்கு வேறு வழிகளும் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், மூத்த வழக்கறிஞர் சீனிவாச மூர்த்தி ஆகியோர், 'தடயவியல் நோக்கங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி யு.ஐ.டி.ஏ.ஐ., கருவிழி ஸ்கேன், கைரேகைகள் தகவல்களை சேகரிப்பதில்லை.
'இறந்து போன ஒரு நபரின் கைரேகையை, ஆதார் கைரேகை உடன் ஒப்பிட்டு, வழக்கில் மனுதாரர் கோரும் தகவல்களை வழங்குவது, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது' என்றனர்.
இதை ஏற்ற நீதிபதி, டி.எஸ்.பி.யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.