வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என டி.ஜி.பி.,க்கு புகார் கடிதம்
வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என டி.ஜி.பி.,க்கு புகார் கடிதம்
வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என டி.ஜி.பி.,க்கு புகார் கடிதம்
ADDED : ஜூலை 04, 2025 12:54 AM

சென்னை:கோவில் காவலாளி அஜித்குமார், 27, கொலை வழக்கில், சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு கேட்டும், அஜித்குமாரை போலீசார் அடித்ததை, 'வீடியோ' எடுத்த வாலிபர், டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து, அவருக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து பேர் கைது
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரை, நகை, பணம் திருட்டு தொடர்பாக விசாரிக்கும் போது, தனிப்படை போலீசார் அடித்துக் கொன்றனர். இந்த கொலை வழக்கில், போலீசார் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
அஜித்குமாரை தனிப்படை போலீசார் அடித்து சித்ரவதை செய்ததை, மடப்புரத்தைச் சேர்ந்த கோவில் ஊழியர் சக்தீஸ்வரன், 34, கழிப்பறை ஜன்னல் வழியாக, 'வீடியோ' எடுத்துள்ளார்.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக, இந்த வீடியோ சேர்க்கப்பட்டுள்ளது.
சக்தீஸ்வரன் உள்ளிட்ட நான்கு சாட்சிகளின் வாக்குமூலங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில், சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு சக்தீஸ்வரன் கடிதம் அனுப்பினார்.
அதில், அவர் கூறியிருந்ததாவது:
நான் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளி அம்மன் கோவிலில், இரண்டரை ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வருகிறேன்.
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், நேரடி சாட்சியாவேன். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, நீதிபதிகளிடம் சாட்சியம் அளித்துள்ளேன்.
எனக்கும், மற்ற சாட்சிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதாகி உள்ள தனிப்படை போலீஸ்காரர் ராஜா, ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி உடையவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்துள்ளார். அவர்களை பயன்படுத்தும் நபராகவும் உள்ளார்.
சித்ரவதை
ஜூன் 28ம் தேதி காலை, ராஜாவை நான் சந்தித்தபோது, என்னை கடுமையாக மிரட்டினார். நான் தான் அஜித்குமாரை அடித்து சித்ரவதை செய்ததை வீடியோ எடுத்தேன்.
அந்த வீடியோவை நீதிமன்றத்தில் ஒப்படைத்ததால், எனக்கும், என்னை சார்ந்தவர்களின் உயிர், உடைமைகளுக்கும் அச்சுறுத்தல்கள் வருகின்றன. மற்ற சாட்சியினரின் உயிருக்கும் அச்சுறுத்தல்கள் உள்ளன.
நீதிமன்ற உத்தரவின்படி, எனக்கும், மற்ற சாட்சியினருக்கும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அவசியமாகிறது. திருப்புவனம் அல்லாத, பிற மாவட்டங்களைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
இதையடுத்து, வீடியோ எடுத்தவரும், முக்கிய சாட்சியுமான சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்படி, ராமநாதபுரத்தில் இருந்து ஆயுதப்படை காவலர்கள் இரண்டு பேர், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்ற சாட்சிகளுக்கும் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்தி உள்ளே...