கூட்டுறவு வங்கி கல்வி கடன் ரூ.5 லட்சமாக அதிகரிப்பு
கூட்டுறவு வங்கி கல்வி கடன் ரூ.5 லட்சமாக அதிகரிப்பு
கூட்டுறவு வங்கி கல்வி கடன் ரூ.5 லட்சமாக அதிகரிப்பு
ADDED : பிப் 10, 2024 06:26 PM
சென்னை:கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வி கடன் உச்ச வரம்பை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பை யன் உத்தரவிட்டு உள்ளார்.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகளில், ஒரு லட்சம் ரூபாய் வரை தற்போது கல்வி கடன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கூட்டு றவு நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வி கடன் உச்ச வரம்பு, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பதிவாளர் என்.சுப்பையன், கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்கள், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாணவர்களின் நலன் கருதி, கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் கல்வி கடன் உச்ச வரம்பை, 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்த அனுமதி அளிக்கப்படுகிறது.
தலைமை கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இந்தக் கடனை வழங்கலாம். ஒரு லட்சம் ரூபாய் வரை பிணையம் இன்றி வழங்கலாம்.
அதற்கு மேல், 5 லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படும் கடனுக்கு, பிணையம் பெறப்பட வேண்டும்.
டியூஷன் கட்டணம், தங்கும் விடுதி, உணவு, ஆய்வக கட்டணம் உள்ளிட்டவை சேர்த்து கடன் வழங்க வேண்டும்.
கடனுக்கான வட்டி விகிதம், அந்தந்த வங்கியில் உள்ள சொத்து பொறுப்பு குழு வாயிலாக நிர்ணயம் செய்யப்படும்.
கல்வி பயிலும் காலம் முடிந்து, ஆறு மாதங்கள் கழித்து வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் கடனை, வட்டியுடன் செலுத்த வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலை வழங்கும் டிப்ளமா படிப்பு, தொழில் முறை படிப்பு, இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகளுக்கு கடன் வழங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.