Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை வேலுாரில் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை வேலுாரில் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை வேலுாரில் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை வேலுாரில் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

ADDED : ஜூன் 26, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
வேலுார்:வேலுார் மாநகரின் மையப்பகுதியில், 100 ஆண்டு பழமையான, பென்லேன்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில், 197.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏழு தளங்களை கொண்ட அரசு, 'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

வேலுார் பென்லேன்ட் மருத்துவமனையில், 560 படுக்கை வசதி, 11 நவீன அறுவை சிகிச்சை அரங்கங்கள் உள்ளடக்கிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் முதல்வர் திறந்த உடன், புறநோயாளிகள் பிரிவு நேற்று முதலே செயல்படத் துவங்கியது.

தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரசவ அறை, மகப்பேறு அவசர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை அறுவை அரங்கம், அவசர சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் பிரிவு ஆகியவற்றை பார்வையிட்ட முதல்வர், ஒவ்வொரு பிரிவு குறித்தும், மருத்துவர்களிடம் சிகிச்சை அளிப்பது குறித்தும், மருத்துவமனைக்கு தேவைப்படும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பென்லேன்ட் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், கட்டட பணிகளை பொறுத்தவரை, 100 சதவீதம் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.

தரைதளத்தில் வரவேற்பு அறை, புறநோயாளிகள் பதிவு மையம், பிரசவ அறை, மகப்பேறு அவசர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை அறுவையரங்கம், மருந்தகம், மத்திய கிருமி நீக்க சேவைகள் துறை மற்றும் சலவை துணி தொகுதி, 2வது, 3வது தளத்தில், இதயம், எலும்பு முறிவு, நரம்பியல் பிரிவு உள்ளிட்டவையும் அடுத்தடுத்து துவங்கப்பட உள்ளன.

மேலும், 7வது தளத்தில், 10 துறைகளின் அறுவை சிகிச்சை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை வாயிலாக, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளடக்கிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் பயன்பெறுவர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், சுப்பிரமணியன், வேலு, காந்தி மற்றும் கலெக்டர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, அணைக்கட்டு பகுதியில், தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமார் தன் சொந்த செலவில், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நுாலக வசதியுடன் கட்டிய, கலைஞர் அறிவாலயம் மற்றும் கருணாநிதி சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, வேலுார் மாவட்டத்தில், தொரப்பாடி, சேர்க்காடு, திருவலம், பொன்னை, ஊசூர், ஒடுக்கத்துார், பேரணாம்பட்டு, உள்ளிட்ட ஒன்பது இடங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், புதிதாக கட்டிய கட்டடங்களை திறந்து வைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us