இந்திய ராணுவத்துக்கு ஆதரவு: சென்னையில் ஒற்றுமை பேரணி: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு: சென்னையில் ஒற்றுமை பேரணி: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு: சென்னையில் ஒற்றுமை பேரணி: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
ADDED : மே 11, 2025 04:59 AM

சென்னை: இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று ஒற்றுமை பேரணி நடந்தது.
மெரினா கடற்கரையில் உள்ள டி.ஜி.பி., அலுவலத்தில் துவங்கிய பேரணி, தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை நடந்தது.
பேரணியில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், காவல் துறையினர், என்.சி.சி., மாணவர்கள் என, 10,000க்கும் மேற்பட்டோர், கைகளில் தேசியக்கொடி ஏந்தியவாறு பங்கேற்றனர்.
காமராஜர் சாலை மற்றும் நேப்பியார் பாலம் வழியாக, ஒரு மணி நேரம் நடந்த பேரணி, போர் நினைவுச் சின்னம் அருகே நிறைவு பெற்றது.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, இந்தியா - பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முரளி நாயக் உருவப்படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
டி.ஜி.பி., அலுவலகம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை, 200 நிழற்கூடங்கள்; 50 கழிப்பறைகள்; 10 மருத்துவ முகாம்கள்; 71 குடிநீர் தொட்டிகள்; 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
இதில் பங்கேற்ற பின், துணை முதல்வர் உதயநிதி கூறுகையில், ''தேசப்பற்றில் முதன்மையான மாநிலமாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக முதல்வர் ஸ்டாலின், நம் ராணுவத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்த ஒற்றுமை பேரணியை நடத்தி உள்ளார். இது, நம் ராணுவத்திற்கு நாம் செய்யும் நன்றி,'' என்றார்.
தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறுகையில், ''ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு நம்பிக்கை தருவதோடு, அவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் என்றும் இருப்போம் என்பதை குறிக்கும் வகையில் இந்த பேரணி நடந்தது. நம்மை காக்க உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு, நாம் உறுதுணையாக இருப்போம்,'' என்றார்.
பேரணியில், அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, சுப்பிரமணியன், மகேஷ், செழியன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.