கண்டதேவியில் நாளை தேர் வெள்ளோட்டம்
கண்டதேவியில் நாளை தேர் வெள்ளோட்டம்
கண்டதேவியில் நாளை தேர் வெள்ளோட்டம்
ADDED : பிப் 10, 2024 01:21 AM

தேவகோட்டை, : சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம் நாளை காலை நடக்கிறது.
தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தான நிர்வாகத்தில் சிறிகிழிநாதர் என்ற சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது.தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி என்ற நான்கு நாட்டைச் சேர்ந்த 170 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு தலைமைக் கோயில் இது. இக்கோயில் தேரோட்டம் ஆனியில் கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும்.
தேரோட்ட பிரச்னை
தேரோட்டத்தில் வடம் பிடிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சில ஆண்டுகள் தேரோட்டம் நின்றது. கும்பாபிஷேகம், தேர்பழுது என காரணம் கூறி 2006 ல் இருந்து தேரோட்டம் நடத்தவில்லை.
இந்நிலையில் புதிய தேர் செய்யப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக ஓடாமல் இருந்தது. பக்தர்கள் ஐகோர்ட் சென்றதால் நீதிபதி தேர் வெள்ளோட்டம் நடத்த உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகம் வெள்ளோட்டம் விடுவதற்காக அனைத்து தரப்பையும் அழைத்து பேசியது. சிவகங்கை சமஸ்தான பணியாளர்களை வைத்து வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை (பிப். 11) காலை 6:30 மணிக்கு தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடு
இதுவரை இல்லாத அளவில் தேரோடும் வீதியில் யாரும் நுழையாத படி கண்டதேவி கோயில், ஊரணியைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் செக்போஸ்ட் அமைத்தும் கண்காணிக்கப்படுகிறது.