'டிவி'க்களுக்கு தணிக்கை; பார்லி குழு பரிசீலனை: உயர் நீதிமன்றத்தில் தகவல்
'டிவி'க்களுக்கு தணிக்கை; பார்லி குழு பரிசீலனை: உயர் நீதிமன்றத்தில் தகவல்
'டிவி'க்களுக்கு தணிக்கை; பார்லி குழு பரிசீலனை: உயர் நீதிமன்றத்தில் தகவல்
ADDED : மார் 19, 2025 05:51 AM

'டிவி' தொடர், விளம்பரங்களை கட்டுப்படுத்த தணிக்கைக்குழு அமைக்கக்கோரி தாக்கலான வழக்கில், 'இந்த விவகாரம் பார்லிமென்ட் குழு பரிசீலனையில் உள்ளது' என, மத்திய அரசு தெரிவித்ததை பதிவு செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கை தள்ளுபடி செய்தது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில், குடும்பத்தை கெடுப்பது, விவாகரத்து செய்வது, பழிவாங்குவது தான் இடம் பெறுகிறது. பார்வையாளர்கள் மனதில் தவறான எண்ணம் விதைக்கப்படுகிறது. பாலியல் தொடர்பான படங்கள் திரையிடப்படுகின்றன. இவை கலாசாரத்தை இழிவுபடுத்துகின்றன. இவற்றை ஒழுங்குபடுத்துவது அவசியம். வெள்ளித்திரை போல தணிக்கைக் குழு இருக்க வேண்டும்.
'டிவி' நிகழ்ச்சிகள், தொடர்கள், செய்தி ஒளிபரப்புகளுக்கு விதிமுறைகள் உருவாக்க வேண்டும். தொடர்கள், விளம்பரங்களை கட்டுப்படுத்த தணிக்கைக் குழு அமைக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்க, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மத்திய அரசு தரப்பில், 'இந்த விவகாரம் பார்லிமென்ட் குழுவின் பரிசீலனையில் உள்ளது' என, தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், 'தற்போது இதில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.
- நமது நிருபர் -