சிறைகளின் நிலையை ஆய்வு செய்வதற்கு நீதி துறை அதிகாரியை நியமிக்க வழக்கு
சிறைகளின் நிலையை ஆய்வு செய்வதற்கு நீதி துறை அதிகாரியை நியமிக்க வழக்கு
சிறைகளின் நிலையை ஆய்வு செய்வதற்கு நீதி துறை அதிகாரியை நியமிக்க வழக்கு
ADDED : செப் 11, 2025 11:53 PM
சென்னை:'நீதித்துறை அதிகாரியை ஆணையராக நியமித்து, தமிழக சிறைகளின் தற்போதைய நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
'தமிழகம் முழுதும் உள்ள சிறைகளில், கைதிகளுக்கான கழிப்பறைகள் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை.
கழிப்பறைகளை பராமரித்து சுத்தப்படுத்துவது குறித்து, அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கிஷோர் குமார் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, ''ஏற்கனவே இது தொடர்பான ஒரு வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதி சிறைகளை திடீர் ஆய்வு செய்ததில், சிறைகளில் உள்ள கழிப்பறைகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதேபோல், டில்லி உயர் நீதிமன்றமும், அந்த மாநிலத்தில் உள்ள சிறைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகள் இன்னும் பின்பற்றப்படவில்லை.
சேலம் மத்திய சிறையில் உள்ள 862 கழிப்பறைகளை சுத்தப்படுத்த, ஒரு ஊழியர் மட்டுமே உள்ளார். இதே நிலை தான் மற்ற சிறைகளிலும் உள்ளன,'' என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், 'இந்த விஷயத்தில் பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது; தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்தால், விசாரித்து உத்தரவிட முடியும்' என தெரிவித்து, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.