பழநியில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடுநடவடிக்கை கோரி வழக்கு; அரசுக்கு நோட்டீஸ்
பழநியில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடுநடவடிக்கை கோரி வழக்கு; அரசுக்கு நோட்டீஸ்
பழநியில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடுநடவடிக்கை கோரி வழக்கு; அரசுக்கு நோட்டீஸ்
ADDED : ஜூன் 13, 2025 02:09 AM
மதுரை:திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை கோரி தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பழநி சின்னகலையமுத்துார் புருஷோத்தமன் தாக்கல் செய்த பொதுநல மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அதிக பக்தர்கள் வருகின்றனர். இங்கு பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குகின்றன. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை எந்த ஒரு நபரோ, தொழிற்சாலையோ உற்பத்தி செய்யக்கூடாது. அதை பாதுகாத்தல், வினியோகம், விற்பனை செய்யக்கூடாது என தமிழக அரசு 2018 ல் அரசாணை பிறப்பித்தது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பேப்பர், தட்டு, கப், டம்ளர், ஸ்பூன் உள்ளிட்ட பொருட்கள் பழநி நகராட்சிக்குட்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. இதனால் உடல்நலம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தடுக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. எத்தனை பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என நகராட்சியிடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரம் கோரினேன். பதிலளிக்க பொது தகவல் அலுவலர் மறுத்துவிட்டார்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பழநியில் பயன்படுத்துவோர், விற்பனை மற்றும் உற்பத்தி செய்வோர், இருப்பு வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், கலெக்டர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.