Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/'புற்றுநோய் பரிசோதனை 18 வயதுக்கு மேல் அவசியம்!'

'புற்றுநோய் பரிசோதனை 18 வயதுக்கு மேல் அவசியம்!'

'புற்றுநோய் பரிசோதனை 18 வயதுக்கு மேல் அவசியம்!'

'புற்றுநோய் பரிசோதனை 18 வயதுக்கு மேல் அவசியம்!'

ADDED : ஜன 23, 2024 05:20 AM


Google News
சென்னை : ''தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வதுடன், மூன்றாண்டுக்கு ஒருமுறை கட்டாயம் மறுபரிசோதனை செய்வதும் அவசியம்,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.

இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள், இதயம், புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரிக்கும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, தொற்றா நோயை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டத்தை, பொது சுகாதாரத் துறை செயல்படுத்தி வருகிறது.

முதல்கட்டமாக, ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியா குமரி, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, வீடு வீடாக அழைப்பு கடிதத்தை, சுகாதார பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:

மூன்று விதமான புற்றுநோய் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக, வாய் புற்றுநோய், இரு பாலருக்கும் வருகிறது. அதனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம்.

அதேபோல, 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம். புற்றுநோயை பொறுத்தவரையில், ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், உயிரிழப்பை தடுக்க முடியும்.

அந்த வகையில், நான்கு மாவட்டங்களில், 19 லட்சம் பெண்கள் உட்பட 52 லட்சம் பேரை பரிசோதிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us